ETV Bharat / bharat

மக்களவைத் தேர்தலில் களமிறங்குகிறார் யூசுப் பதான்.. மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

author img

By ANI

Published : Mar 10, 2024, 6:45 PM IST

Yusuf Pathan: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

kolkatta
kolkatta

கொல்கத்தா: நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தலுக்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

பாஜக 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதல் கட்டமாக வெளியிட்டது. அதன்பின், காங்கிரஸ் 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ராகுல் காந்தி கடந்த முறை போன்று, வயநாட்டிலேயே போட்டியிடுவதாக அந்த பட்டியலின் மூலம் தெரிய வந்தது.

மற்றொருபுறம், இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், திரிணால் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 10) வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை, கொல்கத்தாவின் பிரிகேட் பராடா மைதானத்தில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டார். மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் எனவும் அறிவித்தார்.

அதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசுப் பதான் இடம் பிடித்துள்ளார். அவர் பஹரம்புர் தொகுதியில் போட்டியிடுகிறார். கிருஷ்ணாநகரில் மஹுவா மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார். வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீதமுள்ளதில் பாஜக 18, காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “இதுதான் என்னுடைய அரசியல்”.. திமுக உடனான கூட்டணிக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.