ETV Bharat / bharat

அரசியலுக்கு வருவீங்களா?.. நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த ரியாக்சன்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 4:17 PM IST

Allu Arjun talk about Politics Entry: நாடாளுமன்றத் தேர்தல் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் வாக்களித்த நடிகர் அல்லு அர்ஜுன் அரசியல் தொடர்பாகவும், நந்தியாலா பிரச்சாரத்தின்போது நேர்ந்த சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்தார்.

Allu Arjun Telugu superstar Allu Arjun cast his vote in Hyderabad
Allu Arjun Telugu superstar Allu Arjun cast his vote in Hyderabad (Photo Credits to ANI)

ஹைதராபாத்: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தான் எந்தக் கட்சியுடனும் அரசியல்ரீதியாக இணைந்திருக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் இத்தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கியது. இன்று 4ம் கட்டமாக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு துவங்கிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்குச் செலுத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர்கள் அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் காலையிலேயே சக வாக்காளர்களுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், "மக்கள் அனைவரும் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும். நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள் ஆகையால் அனைவரும் கட்டாயம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், அரசியல் தொடர்பான கேள்விக்கு, "நான் எந்த கட்சியுடனும் அரசியல் ரீதியாக இணையவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் நடுநிலையாக இருக்கின்றேன்" என்றார்.

எதிர்கால அரசியல் தொடர்பான கேள்விக்கு, சிரித்துக் கொண்டே அக்கேள்வியை நிராகரித்தார் அல்லு அர்ஜுன்.

முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் நந்தியாலாவில் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் முன் அனுமதியின்றி பங்கேற்றதால், தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது ஆந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அல்லு அர்ஜுன் பிரச்சாரத்தின்போது, கூட்டத்தை நோக்கி கை அசைக்கும் வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தெலங்கானா தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு? - எந்த தொகுதியில் அதிகம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.