ETV Bharat / bharat

ராஜஸ்தான் தாமிர சுரங்க லிப்ட் கயிறு அறுந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி! 14 பேர் பத்திரமாக மீட்பு! - Rajasthan Mine Lift collapse

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 2:00 PM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 14 பேர் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Rescue Workers at Kolihan Copper Mine in Jhunjhunu (Etv Bharat)

ஜுன்ஜுனு: ராஜஸ்தான் மாநிலம ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தாமிர சுரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நேற்று (மே.14) இரவு சுரங்கத்தின் லிப்ட் கயிறு திடீரென அறுந்து சுமார் ஆயிரத்து 875 அடி கீழே விழுந்தது.

இந்த விபத்தின் போது கொல்கத்தாவை சேர்ந்த விஜிலென்ஸ் குழுவைச் சேர்ந்த சுமார் 15 அதிகாரிகள் சுரங்கத்தில் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து மீட்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

பல மணி நேரத்தை தாண்டி சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. முதல் கட்டமாக சுரங்கத்தில் சிக்கிய மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில் முதலுதவி வழங்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் உள்ளே சிக்கிய 12 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

சுரங்க விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் எஞ்சிய 14 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லிப்ட் அறுந்து சுரங்கத்தில் சிக்கியிருந்த 14 பேரை பேரிடர் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். லிப்ட் அறுந்து 1,875 அடி ஆழத்தில் சிக்கியிருந்த 14 பேர், 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் தளத்தில், "ஜுன்ஜுனுவின் கெத்ரியில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிப்ட் கயிறு அறுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், சுரங்கத்தில் சிக்கியவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், "ஜுன்ஜுனுவில் உள்ள இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டின் கோலிஹான் சுரங்கத்தில் லிப்ட் கயிறு அறுந்து விபத்துக்குள்ளான செய்தி கவலை அளிக்கிறது. இந்தச் சுரங்கத்தில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுரங்கத்தில் சிக்கியுள்ள மக்களை விரைவில் பத்திரமாக வெளியேற்றும் வகையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அரசு மற்றும் நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறேன். லிப்டில் இருந்த அனைத்து மக்களும் உயிருடன் திரும்பி வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "இஸ்லாமியர்கள் மீதான அன்பை கூவி விற்க விரும்பவில்லை... இந்து-இஸ்லாமா பொது வாழ்வுக்கு தகுதியற்றுப் போவேன்" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.