ETV Bharat / bharat

"இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்தவர் முன்னாள் பிரதமர் நேரு" - பிரதமர் மோடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 10:59 PM IST

Updated : Feb 8, 2024, 8:31 PM IST

Pm Modi in Rajya Sabha: இடஒதுக்கீட்டை நேரு தீர்க்கமாக எதிர்த்தார் என்றும் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தலுக்கு பின் புதிய அரசு அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி பிரதமர் மோடி மக்களவையில் உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து இன்று (பிப். 7) மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் நேரு தனது ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியவர். பிரதமராக இருந்த நேரு, மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், பணிகளில் எவ்வித இடஒதுக்கீட்டையும் தான் விரும்பவில்லை. அதனை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் தான் எதிர்ப்பதாகவும் இடஒதுக்கீடு திறனின்மையை ஊக்குவிக்கும். அது சாதாரணமானவர்களை பணியில் அமரவைக்கும் என்று குறுப்பிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும், பணியில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் அது அரசாங்கப் பணிகளின் தரத்தை குறையச் செய்யும் என்று நேரு தனது கடிதத்தில் தெரிவித்து இருந்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டர். மேலும், நேரு வேலைவாய்ப்பில் பட்டியல் / பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை தீர்க்கமாக எதிர்த்ததாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீட்டை முழுமையாக வழங்காத காங்கிரஸ் சமூக நீதி பற்றி உபதேசம் செய்யக்கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.

ஓபிசி மக்களுக்கு மட்டுமின்றி, பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் காங்கிரஸ் இடஒதுக்கீடு வழங்கியதில்லை என்றும் பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே காங்கிரஸ் எப்போதும் செயல்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியர்களின் மதிப்பை, திறனை அப்போதைய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி குறைத்து மதிப்பிட்டதாகவும் செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய போது நேரு, இந்தியர்களுக்கு கடுமையாக உழைக்கும் பழக்கம் இல்லை என தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டர்.

காங்கிரஸ் கட்சி 2024 மக்களவைத் தேர்தலில் 40 இடங்களை பெறுவதற்கு நான் இறைவனை வேண்டுகிறேன் என பிரதமர் மோடி கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் 400 இடங்கள் பேச்சு குறித்து அவரை தெரிவித்த பிரதமர் மோடி, தான் அவரது பேச்சைக் கேட்டபோது இவ்வளவு சுதந்திரமாக பேச அவருக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது என்று தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி அதன் ஆட்சியின் போது தேசியமயமாக்கல், தனியார்மயமாக்கல் குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பாரத ரத்னா வழங்கி, சாலைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் சூட்டியதாகவும் காங்கிரஸ் கட்சியின் சீரழிவுகள் தன்னை வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க : உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

Last Updated : Feb 8, 2024, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.