ETV Bharat / bharat

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிபிஐ விசாரணை அவசியமில்லை- சித்தராமையாவின் திட்டம் என்ன? - Karnataka MP Prajwal revanna case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 4:32 PM IST

கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பதை நிராகரித்த முதலமைச்சர் சித்தராமையா, மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் மீது நம்பிக்கையிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Karnataka Chief Minister Siddaramaiah (Photo credits: IANS Photos)

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. தன்னிட்டம் உதவி கோரிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா எதிராக இதுவரை மூன்று பெண்கள் நேரடியாக புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர் மீது மூன்று வழக்குகளை பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சியான பாஜக கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, மாநில போலீசாரின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய சூழலில் சிபிஐ விசாரணைக்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மாநில போலீசார் மீது பாஜகவுக்கு நம்பிக்கையில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை திசைத் திருப்பும் வகையிலும், காவல் துறை மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் பாஜகவினர் ஏன் அவதூறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் மாநில போலீசார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு திறமையான முறையில் வழக்கை கையாண்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், முன்னதாக சிபிஐ-யை ஊழல் அமைப்பு என்று பாஜக விமர்சித்ததாகவும், ஆட்சியில் இருக்கும் போது காங்கிரஸ் கட்சி பலமுறை கோரிக்கை விடுத்த போதும், ஒரு வழக்கை கூட சிபிஐ விசாரணக்கு பாஜக அனுமதித்தது கிடையாது என்றும் தெரிவித்தார்.

இதனால் சிபிஐ மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று அர்த்தமில்லை என்றும், இதற்கு முன் தான் முதலமைச்சராக இருந்த போது 7 வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு வழங்கியதாகவும், ஆனால் அதில் ஒன்றில் கூட குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கப்படவில்லை என்றும் சித்தராமையாஅ கூறினார்.

அதனால் தனக்கு சிபிஐ என்று நம்பிக்கையில்லை என்று கூற முடியாது என்றும், சிபிஐக்கு இணையாக மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். பிரஜ்வல் ரேவண்ணாவின் வழக்கில் மாநில போலீசாரின் மூலம் துப்ப துலக்க விரும்புவதாக சித்தராமையா தெரிவித்தார்.

ஆபாச வீடியோ வழக்கில் ஹசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், அவரை பிடிக்க சிபிஐ உதவியுடன் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் வழக்குப்பதிவு! பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்! - Karnataka MP Prajwal Revanna Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.