ETV Bharat / bharat

மக்களவையில் மத்திய அமைச்சரை அவமதித்தேனா? டி.ஆர். பாலு விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 3:46 PM IST

Updated : Feb 6, 2024, 8:02 PM IST

T.R.Baalu: தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு மக்களவையில் குற்றம் சாட்டினார்.

T.R.Baalu
டி.ஆர். பாலு

டெல்லி: இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி, குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்று (பிப்.5) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், இன்று (பிப்.6) மக்களவையில் வெள்ள நிவாரணம் தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியபோது தி.மு.கவுக்கும், பாரதிய ஜனதா எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், டி.ஆர்.பாலு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஆ.ராசா, தேசிய பேரிடர் நிதியை (national disaster relief fund) பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவது போல், தமிழகத்துக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், எஸ்டிஎப் நிதியில் பணம் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கூறினார். நாங்கள் கேட்டது 37 ஆயிரம் கோடி. ஆனால், அவர்கள் 2 ஆயிரம் மற்றும் ஆயிரத்து 500 கோடி பற்றி துறைக்கு தொடர்பு இல்லாத மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துள்ளது என்றார்.

இதையடுத்து, தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வேண்டும் என நானும், ராசாவும் கேட்டுக் கொண்டிருந்தபோது, மத்திய இணை அமைச்சர் இடையூறு செய்தார். ஆனால், அவர் மீன் வளத்துறை அமைச்சர். கேள்விக்கு பதில் அளிக்க வேண்டியது வேளாண்மைத்துறை அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர். துறைக்கு சம்பந்தமில்லாமல் எல்.முருகன் குறுக்கிட்டதால், உங்களுக்கு தெரியாது நீங்கள் உட்காருங்கள் என்று கூறினேன்.

அதற்கு அமைச்சர் பிரகலாத் ஜோஷியோ, “ஒட்டுமொத்த பட்டியலின அமைச்சரை அவமதித்து விட்டதாக” குற்றம் சாட்டினார். இதனையடுத்து, தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பிற்கு நிதி கொடுக்காததால் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

எனது தலைமையில், அனைத்து கட்சி உறுப்பினர்களும் நேரடியாக உள்துறை அமைச்சரைச் சந்தித்ததில், ஜனவரி 27ஆம் தேதிக்குள் நிதி வழங்கப்படும் என்று கூறினார். ஆனால், இதுவரை செய்யவில்லை. உள்துறை அமைச்சருக்கு ஓரவஞ்சனை கிடையாது. புறக்கணிக்க மாட்டார் என்று கூறினேன். ஆனால், இவை அனைத்தும் இன்று உண்மை.

பிரதமர் உரை முழுவதும் காங்கிரஸை எதிர்த்துதான் இருந்தது. அவர்கள் கையறு நிலையில் உள்ளனர். நாம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பேசினார். இந்தியா கூட்டணியின் மீது மிகப்பெரிய பயம் உள்ளதால்தான், பிரதமர் தொடக்கம் முதல் இறுதி வரை தன்னை தாழ்த்திக் கொண்டு காங்கிரஸை எதிர்த்துப் பேசினார். நிதி வழங்காததை எதிர்த்து, வருகிற 8ஆம் தேதி காலை 10 மணியளவில் கருப்பு ஆடை அணிந்து, அனைத்து கட்சித் தோழர்களும் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், ஒரு வாரத்தில் அனைத்து மக்களும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பின்பற்றும் நோக்கிலான பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்படும் என்று கூறினார். அதன்படி, இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த மசோதா ஒப்புதல் பெறுகிறதா என்பதை பார்க்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் அவற்றை எதிர்போம். பொது சிவில் சட்ட மசோதா எந்த இடத்திலும் வராது என்று கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் , ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மக்கள் யாரை ஏற்கின்றனர், யாரை புறக்கணிக்கின்றனர் என்பது 100 நாட்களில் தெரியும்” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்.. 2 மணி வரை பேரவை ஒத்திவைப்பு!

Last Updated : Feb 6, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.