ETV Bharat / bharat

தொழுகையில் இருந்த இஸ்லாமியர்களை எட்டி உதைத்த டெல்லி போலீஸ் சஸ்பெண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 8:43 AM IST

Delhi police kicks Muslims: டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டு கொண்டு இருந்த இஸ்லாமியர்கள் சிலரை, டெல்லி போலீசார் ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Delhi Police suspended for Muslims kicking issue
தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். எட்டி உதைத்த போலீசார்

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் எட்டி உதைத்த போலீசார்

டெல்லி: டெல்லி இந்தர்லோகில் மசூதி அருகே சாலையோரத்தில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி இந்தர்லோகில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழப்படும் 'ஜும்மா' எனும் சிறப்பு தொழுகைக்கு ஏராளமானோர் இஸ்லாமியர்கள் கூடிய நிலையில், மசூதிக்குள் போதிய இட வசதி இல்லாமல் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக சிலர் மசூதிக்கு வெளியே, அதாவது சாலையில் ஓரத்தில் தொழுது கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் சாலையின் ஓரமாக தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்கள் சிலரை மனிதநேயமற்ற முறையில் காலால் எட்டி உதைத்துள்ளார். போலீசாரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் கோபம் அடையச் செய்தது. உடனடியாக அவர்கள் போலீசாரை சூழ்ந்து கொண்டு அவரது செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் இது குறித்து தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கார்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் எட்டி உதைப்பது, மனிதநேயத்தின் அடிப்படை புரிதல் இல்லாததை காட்டுகிறது.

அந்த போலீஸ்காரரின் மனதில் நிரம்பி இருப்பது என்ன மாதிரியான வெறுப்பு? டெல்லி போலீசார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை உதைப்பது போன்று காட்சி வெளியாகியுள்ளது. இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அதீத செயலாகும்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அந்தச் சம்பவம் குறித்து பதில் அளித்துள்ள இணை ஆணையர் (வடக்கு) மனோஜ் குமார் மீனா கூறுகையில், "அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார். இச்சம்பவத்தினை அடுத்து சட்ட ஒழுங்கமைதியை பாதுகாக்கும் வகையில் சம்பவம் நடைபெற்ற அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரிவு 370 ரத்து குறித்து விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை உண்டு - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.