சேலத்தில் பெரியார் சிலை முன்பு நடைபெற்ற சமத்துவ திருமணம்
சேலம்: சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவராக உள்ளார். கேட்டரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் தினேஷ், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார்.
மேலும் காதலித்த பெண் இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொள்ள விருப்பப்பட்டார். இந்த நிலையில் இன்று, தினேஷ் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் தங்களது பெற்றோர், உறவினர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆன்மீக முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பெரியார் கொள்கையாளரான தினேஷ், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு தம்பதி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன் பின்பு பெரியார் சிலை முன்னிலையில், இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். மேலும், ஆண், பெண் இருவரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக பெரியார் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டு சமத்துவ திருமணம் செய்ததாக மணமகன் கூறி உள்ளார்.