திண்டுக்கல்லில் அதிகாலையிலேயே தூள் பறக்கும் மது விற்பனை.. பொதுமக்கள் வேதனை; மதுப்பிரியர்கள் குஷி
திண்டுக்கல்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் அருந்தி இருபத்தி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கள்ளச்சாராய சந்தையில் திருட்டுத்தனமாகக் கள்ளச்சாராயம் விற்கும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி அருகே உள்ள ஓடைப்பட்டி டாஸ்மாக் பாரில் தினமும் அதிகாலையிலே மது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடத்திலிருந்து வரும் மதுப்பிரியர்கள் காலையிலே வந்து குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனவே, அதிகாலையில் வேலைக்குச் செல்வோர், தங்கள் பணியை மறந்து பாரில் தஞ்சம் புகுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அனுமதியை மீறி அதிகாலையில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக இதுகுறித்து பல்வேறு இடங்களில் புகார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அவர்கள் அதனைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மதுக்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் தற்போது பரவிக்கொண்டு வருகிறது. மேலும், இது குறித்துப் பல முறை தகவல் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம்சாட்டி வருகின்றன.
இதையும் படிங்க: டிஜிபியாக பதவி உயர்வு கேட்கும் ஐ.பி.எஸ்... தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு..