உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பு - பள்ளி மாணவர்கள் அசத்தல்!
Published: Mar 17, 2023, 7:34 PM

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 'நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்' என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி கருவி மற்றும் கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி கருவிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அண்மையில் தொடங்கி வைத்தார்.
மேலும், கடைகளில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியைப் பயன்படுத்தக்கூடாது என்பதனையும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகளை தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹாலில் மூன்று நாட்கள் நடத்தியது. இதில், பேச்சுப் போட்டி, வினாடி - வினா போட்டி, ஓவியப்போட்டி, சிறு நாடகப் போட்டி மற்றும் கழிவுகளை கலையாக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன.
இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு உபயோகமற்ற பொருட்களைக் கொண்டு பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை உருவாக்கினர். இப்போட்டி 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும்; கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதலும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டைப்போல் புதுச்சேரியிலும் மகளிருக்கு இலவசப் பயணம்!