மகளிர் உரிமைத் தொகை : தனியார் பள்ளியின் ஆயிரம் மாணவிகள் "முதல்வருக்கு நன்றி"!
சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனியார் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேர் ஒன்று திரண்டு கையில் பூங்கொத்துடன் நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப். 15) பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டத்தில் சென்னை தனியார் பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். சென்னை கொளத்தூர் எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த ஆயிரம் மாணவிகள் கையில் வண்ணமிகு பூங்கொத்துகளுடன் 1,000 என்ற வடிவில் "முதல்வருக்கு நன்றி" என்ற வாசகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.