கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.
Published: May 26, 2023, 7:38 PM

தென்காசி மாவட்டம்: கடையநல்லூர் அருகே உள்ள புன்னைவனம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து.இவர் சில நாட்களுக்கு முன்பு பிறந்த தனது குழந்தையையும், அவரது மனைவியையும் தனது வீட்டிற்கு அழைத்து வருவதற்காக தனது மனைவியின் ஊரான செங்கோட்டைக்கு தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பேச்சிமுத்து குடும்பத்துடன் காரில் சென்ற போது கடையநல்லூர் யூனியன் அலுவலகம் அருகே செல்லும் வேளையில், இவர்கள் முன்னால் சென்ற கார் திடீரென திரும்பி உள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத பேச்சிமுத்து சென்ற காரின் ஓட்டுனர், காரை முன்னால் சென்ற கார் மீது இடிக்காமல் இருப்பதற்காக இடது பக்கமாக திருப்பி உள்ளார்.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த காரானது அந்த சாலையின் ஓரமாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் மீது மோதிவிட்டு, அதற்கு அடுத்து நின்ற திமுக பிரமுகரின் காரில் இடித்து அதன் அருகே இருந்த கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் திமுக பிரமுகரின் கார் அருகே நின்று கொண்டிருந்த 2 நபர்கள் காயம் அடைந்த நிலையில், காரினுள் இருந்த பூபதி, முருகன், மஞ்சுளா உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கடையநல்லூர் போலீசார், அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், இந்நிகழ்வின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் விபத்து; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55 பயணிகள்!