உங்களின் காதல் துணை ஒரு நாசீசிஸ்ட் என்னும் சந்தேகமா? - இதோ அதற்கான குறியீடுகள்

author img

By

Published : Jan 14, 2022, 6:22 PM IST

Updated : Jan 14, 2022, 7:55 PM IST

உங்களின் காதல் துணை ஒரு நார்சீசிஸ்ட் எனும் சந்தேகமா..? : இதோ அதற்கான குறியீடுகள்

நீங்கள் காதலிக்கும் நபர் ஒரு நாசீசிஸ்ட்டா என்பதைத் தெரிந்துகொள்ள சில வழிமுறைகள்

பொதுவாக, உலகம் தன்னைச் சுற்றித்தான் நகருகிறது, எப்போதும் தானே அனைத்திற்கும் மையப்புள்ளியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு தன்னடக்கமின்றி நடந்துகொள்பவர்களை ‘நாசீசிஸ்ட்’ (Narcissist) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

நாசீசிஸ்ட்கள் எப்போதும் தன்னைப்பற்றித் தானே மிகப்பெரிதாக நினைத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். உங்களது காதல் துணையிடம் இப்படிப்பட்ட குணங்கள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் இந்தக் குறியீடுகள் உங்கள் துணையிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.

யார் இந்த நாசீசிஸ்ட்கள்?

நாசீசிஸ்ட்கள் தங்களை கடவுள்போல் பாவித்துக்கொள்வார்கள், அவர்களின் அச்சமும், கவலையும், பாதுகாப்பின்மை என்ற சிந்தனையும் தாங்கள் அனைவரையும்விட தனித்துத் திகழ்வதாக நினைக்கும் அவர்களின் எண்ணத்தால் மறைந்துவிடும்.

சுயநலமும், சுய ஆவேசமுமே நாசீசிஸமின் வீரியமிக்க அடித்தளமாகும். உளவியல் வல்லுநர்களின் கருத்துப்படி, இம்மாதிரியான குணம் ஒரு வகையான ஆளுமைப் பிரச்சினையைச் சேர்ந்ததுதான். இந்த ’நாசீசிஸம்’ (Narcissism) என்ற பெயர் கிரேக்க புராணங்களிலிருந்த ’நாசீசஸ்’(Narcissus) என்ற பெயரிலிருந்து வந்தது.

நாசீசஸ் என்பது கிரேக்க புராணத்தின்படி கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தன் நிழலையே காதலித்த ஒரு குழந்தையின் பெயர். சிக்மண்ட் பெராய்டு இந்தக் கதையில் வந்த அந்தக் கதாபாத்திரம் சுயநல மக்களைப் பிரதிபலிப்பதாகக் கூறுவார்.

அதிகப்படுத்தப்பட்ட வாழ்க்கை லட்சியங்கள், பிரமாண்ட கனவுகள், இவை அனைத்தும் நாசீசிஸ்ட்களின் குணங்கள்.

நாசீசிஸ்ட்கள் நல்ல துணையா?

நாசீசிஸ்ட்கள் மிக கவர்ச்சியாக இருப்பார்கள், நிறைய வெற்றிகளைக்கூட காணுவார்கள், ஆகையால் அப்படி ஒரு காதல் துணை அமைவது நிச்சயம் நல்ல விஷயமாக இருந்தாலும், அது பல சமயங்களில் தவறான முடிவாகக்கூட மாறலாம்.

நீங்கள் ஒரு நாசீசிஸ்டுடன் காதல் உறவில் இருக்க ஆரம்பித்தால், முதலில் அவர்கள் காதலைப் பொழிவார்கள், அடிக்கடி மெசேஜ் செய்வது, கால் செய்வது, பாராட்டுவது என அனைத்தும் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் அவர்களின் சுய லாபத்திற்காகவே இருக்கும்.

உங்களின் அன்பையும், அரவணைப்பையும் வைத்து உங்களை அவர்கள் வசத்தில் வழிநடத்த முயலுவார்கள். உங்களின் காதலி ஒரு நாசீசிஸ்டாக இருந்தால் ஒரு விநோத குணமாற்றத்தை நீங்கள் சீக்கிரம் காண நேரிடலாம்.

அது உங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தெரியும், நீங்கள் காதலித்த நபரே வேறு ஒரு நபராக மாறியதுபோல் இருக்கும். பல நேரங்களில் காதல் உறவு முறிவதற்கு இந்த மாற்றங்களே காரணமாக இருக்கக் கூடும்.

நாசீசிஸ்ட்கள் நல்ல காதல் துணையாக நிச்சயம் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். ஏனென்றால் அவர்கள் காயப்படுத்துவதில் எந்தக் குற்ற உணர்வும் கொள்ளமாட்டார்கள், அவர்களின் இந்த எண்ணத்தை மாற்ற முடியாதது.

நாசீசிஸ்ட்களின் குணக்குறியீடுகள்

ஆனால் நீங்கள் ஒரு நாசீசிஸ்ட்டுடன் காதல் உறவில் இருந்துகொண்டிருந்தால் என்ன செய்வது? நீங்கள் உங்கள் காதல் உறவின் எல்லா செயல்களையும் சகித்துக்கொண்டே இருப்பதுபோல் தோன்றினால், நீங்கள் நாசீசிஸ்ட் உறவில் இருப்பதாக அர்த்தம். கீழே காணும் குறியீடுகள் உங்களின் உறவின் மறைந்த குணங்களைக் காண உதவும்.

அனுதாபக் குறைவு

நாசீசிஸ்ட்டுகளுக்கு அனுதாபம் எப்போதும் குறைவாகவே இருக்கும். காதலும் அன்பும் நேர்மையாக இருப்பதாக அவர்களிடம் உணர முடியாது. அவர்களின் கவனத்தை செலுத்தவைப்பதும் மிகக் கடினமான செயலாக இருக்கும். அவர்களின் காதல் உறவுகளின் உணர்விற்கு மதிப்பு தர மாட்டார்கள்.

உரையாடலில் ஆதிக்கம் செலுத்துதல்

ஒரு காதல் உறவில் இருவரும் சமமாக உரையாடும்போது தான் அந்த உறவு சரியாக இருக்க முடியும். எப்போதும் தான் தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் நாசீசிஸ்ட்டுகளின் எண்ணத்தில் இருக்கும். மற்றவர்களின் கருத்திற்கு என்றும் செவிசாய்க்கவோ,மதிப்பு கொடுக்கவோ மாட்டார்கள்.

உங்களை எல்லாவற்றிற்கும் காரணமாக்குதல்

இதை நாசீசிஸ்ட்கள் அடிக்கடி செய்வார்கள். காதல் உறவில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்காக எல்லா தப்பிற்கும் உங்களையே காரணம் காட்டுவார்கள். நீங்களும் ஒரு கட்டத்திற்கு மேல் செய்யாத தப்பிற்குக்கூட அவர்களிடம் மன்னிப்பு கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

உயர்வு மனப்பான்மை

நாசீசிஸ்ட் என்றுமே இந்த உயர்வு மனப்பான்மையில்தான் இருப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களின் உணர்வுகள் பற்றிய கவலைகள் இல்லை.

இதையும் படிங்க:ஃபிட் ஆக இருக்க 10 டிப்ஸ்!

Last Updated :Jan 14, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.