மரம் போடும் முட்டை: சைவ முட்டை பழத்தின் அசாத்திய பலன்கள்.!

மரம் போடும் முட்டை: சைவ முட்டை பழத்தின் அசாத்திய பலன்கள்.!
Egg Fruit Health Benefits in Tamil: முட்டை பழம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் இருக்கும் மருத்துவ குணம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஒருங்கிணைந்த பலன் தரும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னை: முட்டையில் அதிகளவு சத்துக்கள் உள்ளன என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் முட்டைப்பழத்தில் உள்ள சத்துக்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?.
கோழி முட்டையில் புரதச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சிலர் முட்டை சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இந்த சத்தெல்லாம் எப்படி கிடைக்கும். முட்டை சாப்பிடாதவர்கள் சைவ முட்டை எனப்படும் முட்டைப்பழத்தை சாப்பிடலாம். அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இது தொடர்பான ஆய்வு கட்டுரை, Research Gate இணையதளப்பக்கத்தில் போடப்பட்டுள்ளது.
முட்டைப்பழத்தில் உள்ள சத்துக்கள்: இந்த பழம் பார்ப்பதற்கு முட்டையின் மஞ்சள் கரு போல் இருப்பதால் இப்பழம் முட்டைப்பழம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த பழம் மஞ்சள் சப்போட்டா என்றும் அழைக்கப்படுகிறது. முட்டைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் சி, தயாமின், நியாசின் போன்ற விட்டமின்களும், தாமிரம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், புரதம் ஆகிய தாதுக்களும் உள்ளன.
எலும்புகளை வலுப்படுத்துகிறது: இந்த பழத்தில் உள்ள அதிகளவு நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. முட்டைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் விட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. கண் பார்வைக்கும் உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலுப்படுத்துகிறது.
இரத்த சோகைக்கு தீர்வு: முட்டைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டைப்பழம் சிறந்த உணவாகும்.
இதய ஆரோக்கியம்: முட்டைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. முட்டைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
சருமத்திற்காக: முட்டைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, சரும பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த பழத்தில் உள்ள விட்டமின் சி, புற ஊதாக்கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
மூளையின் ஆரோக்கியம்: முட்டைப்பழத்தில் உள்ள கரோட்டினாய்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள், நாள்பட்ட வீக்கத்தை சரி செய்கின்றன. மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம். முட்டைப்பழத்தில் உள்ள நியாசின் மற்றும் நியாசினமைடு தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. முட்டைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
