சோர்வடையும் மூளை - அலட்சியம் கூடாது!

author img

By

Published : Jan 20, 2023, 7:55 PM IST

do

பிரெய்ன் ஃபாக்கின் அறிகுறிகள் தென்பட்டால் அதை அலட்சியமாக கடந்து செல்லக்கூடாது என்றும், அது அல்சைமர் போன்ற நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹைதராபாத்: பிரெய்ன் ஃபாக் (brain fog) என்பது ஒரு நோய் அல்ல, அது ஒரு நிலை. இந்த பிரெய்ன் ஃபாக் என்பது மூளையின் சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறன் குறையும் நிலையாகும். இந்த நிலை ஏற்படும் போது, நாம் குறிப்பிட்ட சில விஷயங்களில் கவனம் செலுத்துவது சிக்கலாகும்.

கவனக்குறைவு, பவீனமாக உணர்தல், திடீர் மனநிலை மாற்றங்கள், தற்காலிக ஞாபக மறதி உள்ளிட்டவை பிரெய்ன் ஃபாக்கின் அறிகுறிகள். கொரோனா காலங்களில் இந்த பிரெய்ன் ஃபாக் நிலை குறித்து பரவலாக பேசப்பட்டது. காரணம், கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க விளைவாக இந்த பிரெய்ன் ஃபாக் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஆஷிஷ் சிங் கூறும்போது, "கொரோனா காலகட்டத்தில் பிரெய்ன் ஃபாக் குறித்து மக்கள் அதிகம் அறிந்து கொண்டனர். ஆனால், இது ஒரு பொதுவான பிரச்சினைதான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் மட்டுமல்ல இப்போதும் இந்த நிலை பலரிடம் காணப்படுகிறது.

சமநிலையற்ற வாழ்க்கை முறை கொண்டவர்களிடம் இந்த பிரெய்ன் ஃபாக் காணப்படுகிறது. பணிச்சுமை, மன அழுத்தம், எதிர்காலம் குறித்த கவலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த பிரெய்ன் ஃபாக் ஏற்படலாம். சில மருத்துவ சிகிச்சைகள் காரணமாகவும் இந்த நிலை ஏற்படுகிறது.

இது ஒரு தீவிரமான நோய் அல்ல. அதேபோல் இந்த நிலை ஒரு நபரின் மன நலனை பாதிக்கும் என்று கூறுகிறார்கள், அது ஒரு கட்டுக்கதை. பிரெய்ன் ஃபாக் நிலை ஒருவரது அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. அதாவது ஒருவரது வேலை அல்லது நினைவாற்றல் பாதிக்கப்படும்போது, அவருக்கு மனச்சோர்வு, பதட்டம் போன்றவை ஏற்படக்கூடும்.

இந்த பிரெய்ன் ஃபாக், அல்சைமர் போன்ற நோய்களின் அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது பல்வேறு மன நல பிரச்சினைகளுக்கும் அறிகுறியாக கருதப்படுகிறது. மூளைக்காய்ச்சல், பக்கவாதம், சர்க்கரை நோய், ஒற்றைத் தலைவலி போன்றவற்றாலும் இந்த பிரெய்ன் ஃபாக் ஏற்படலாம்.

பிரெய்ன் ஃபாக்கிற்கான பிற காரணங்கள்:

  • மனச்சோர்வு அல்லது மன அழுத்தம்
  • பணிச்சுமை
  • ஹார்மோன் சமநிலையின்மை
  • தூக்கமின்மை
  • வைட்டமின் குறைபாடு
  • ரத்த சோகை
  • செல்போன், கணினி, டிவியை அதிகம் பயன்படுத்துவது

பெண்களின் கர்ப்ப காலம், மெனோபாஸ் நிலை போன்ற ஹோர்மோன் மாற்றங்கள் அதிகம் இருக்கும் காலங்களில் இந்த பிரெய்ன் ஃபாக் நிலை காணப்படுகிறது. இந்த அறிகுறிகள் மக்களின் உடல் மற்றும் மனநிலைகளைப் பொறுத்து மாறுபடுகிறது. அதேபோல் ஒருவரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்படக்கூடும். அவை,

  • ஞாபக மறதி, நபர்களின் பெயர்கள் அல்லது பொருட்களின் பெயர்களை மறப்பது
  • வேலையில் கவனம் செலுத்த முடியாதது
  • குழப்பமான மனநிலை
  • தூக்கமின்மை அல்லது மிகவும் சோர்வாக உணர்வது
  • வேலை, படிப்பில் செயல்திறன் குறைவது
  • வேலையில் வேகம் குறைவது
  • நீடித்த குழப்பநிலை

இந்த பிரெய்ன் ஃபாக் நிலை வயது முதிர்வு காரணமாக முதியோர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலை இளையோரிடம் காணப்பட்டாலோ அல்லது ஏதாவது மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு காணப்பட்டாலோ அலட்சியமாக விடாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

பிரெய்ன் ஃபாக்கின் மோசமான அறிகுறிகள் தென்பட்டால், முதலில் அந்த நிலையை புரிந்து கொண்டு அதை ஏற்க வேண்டும். அதோடு உணவுமுறை, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும். சில பழக்க வழக்கங்கள் இந்த பிரெய்ன் ஃபாக் நிலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும். அவை,

  • தொடர் வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது இடைவேளை அல்லது ஓய்வு எடுக்க வேண்டும்
  • ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்
  • தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
  • யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்
  • ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்
  • மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தினசரி நேரம் ஒதுக்க வேண்டும்
  • எந்த வேலையையும் அழுத்தமின்றி இலகுவாக செய்ய வேண்டும்
  • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும்

இதையும் படிங்க: குளிர்காலமானாலும் தேவையான அளவு தண்ணீர் குடிங்க...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.