தீபாவளி: பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒளிரப்போவது எப்போது?

author img

By

Published : Oct 24, 2022, 4:04 PM IST

பட்டாசு தொழிலாளர்

வருடத்தில் ஒரு நாள் ஒளிக்காக 364 நாட்கள் இருளிலும், கரும்புகையிலும் வாழும் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எப்போது ஒளிரப்போகிறது என்ற கேள்விக்கு பதில் இன்றுவரைக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதுகுறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

விருதுநகர்: இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும் பட்டாசு என்றால் சிவகாசிதான், சிவகாசி என்றால் பட்டாசுதான் முதலில் நினைவுக்கு வரும். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இனி வரும் காலங்கள் அப்படி இருக்குமா என்ற கேள்விகள் சிவகாசியை சுற்றிச் சுழல ஆரம்பித்துள்ளன. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சம் மக்கள் பட்டாசுத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். பட்டாசுத் தொழில் இல்லையென்றால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறிதான். அவர்களுக்கு மாற்றுத் தொழில் என்பதும் கிடையாது.

பட்டாசுத் தொழிலுக்கு தடை: இந்நிலையில் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், பட்டாசுத் தொழில் அதிக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்துவதாகவும், தொழிலாளர்களின் உயிருக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் கூறி பட்டாசுத் தொழிலை தடை செய்தது. இது சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 29ஆம் தேதி 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பேரியம் நைட்ரேட் என்ற கெமிக்கல் பொருளை பட்டாசுத் தொழிலுக்கு பயன்படுத்தக் கூடாது என்று தடைவிதித்திருந்தது.

பட்டாசு தொழிலாளர்
பட்டாசு தொழிலாளர்

இந்த கெமிக்கல் வானவெடி, சங்கு சக்கரம், புஷ்வானம் போன்ற அதிகப்படியான பட்டாசு உற்பத்திக்கு பயன்படுகிறது. அடுத்தபடியாக பட்டாசு உற்பத்தியில் சரவெடி அதிக உற்பத்தியான நிலையில், சரவெடியால் அதிக புகை வருவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், சரவெடியையும் தடை செய்தது. பட்டாசு உற்பத்தியில் சரவெடி பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் அதிகப்படியாக தயார்செய்யப்படுவது சரவெடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களில் சரவெடித் தொழிலில் மட்டும் ஈடுபடுபவர்கள் பாதிக்கு பாதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டாசு தொழிலாளர்
பட்டாசு தொழிலாளர்

அலுவலர்கள் திடீர் சோதனை: இந்த சூழ்நிலையில் வானவெடி, சங்கு சக்கரம், புஷ்வானம், மற்றும் சரவெடி போன்ற உற்பத்திப் பொருட்களுக்கு தடை விதித்திருந்தாலும் ஒரு சில தொழிற்சாலைகள் மக்களின் வாழ்வாதாரத்திற்காக மறைமுகமாக தயாரித்து வருகின்றனர். மேலும் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும் பட்டாசுகளை உற்பத்தி செய்யக்கூடாது என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், ஒவ்வொரு பட்டாசுத் தொழிற்சாலையிலும் தினம் தினம் எதிர்பாராத நேரத்தில் அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தது சிவகாசி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பட்டாசு தொழிலாளர்கள்
பட்டாசு தொழிலாளர்கள்

தங்களின் தினசரி வாழ்வாரத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அலுவலர்கள் சோதனைக்கு வரும் நேரத்திற்கு முன் தொழிலாளர்களை “ஆபிஸர் வறாரு ஓடுங்க ஓடுங்க“ என்று தொழிற்சாலை உரிமையாளர்கள் விரட்டிவிடுவது வழக்கமாகிவிட்டது. இதே நிலை தொடர்ந்து இருந்து வந்ததால் பல்வேறு தொழிற்சாலைகள் சீல் வைக்கப்படுவதும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் கரும் புகையில் உழைத்து வந்த சிவகாசி மக்களின் வாழ்க்கையும் கரும்புகையாகவே மாறியது. வருடத்தில் ஒரு நாள் ஒளிக்காக 364 நாட்கள் இருளிலும், கரும்புகையிலும் வாழும் சிவகாசி மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் எப்போது ஒளிரப்போகிறது என்ற கேள்விக்கு பதில் இன்றுவரைக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் தொழில் நகரம் என்று பெயர் பெற்றிருந்தாலும், பட்டாசுத் தொழில் மீது போடப்பட்ட பல்வேறு தடைகளால் சிவகாசி மக்கள் தங்களின் தொழில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரிதாபம் அங்கு வாழ்ந்தவர்களின் கண்களுக்கு மட்டுமே புலப்படும். பட்டாசுடன் பிண்ணிப் பிணைந்த அவர்களின் வாழ்க்கையில் மாற்றுத்தொழில் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பட்டாசு தொழிலாளர்
பட்டாசு தொழிலாளர்

குடும்ப சுமை: பட்டாசுத் தொழில் மீது போடப்பட்ட தடையால் வாழ்விழந்து தவிக்கும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் தெரிவிப்பதாவது, ”தினசரி கூலித் தொழில் செய்து கொண்டிருக்கும் எங்கள் வாழ்க்கையில் பட்டாசு தொழில் இல்லாததால, ரேஷன் அரிசிய திண்ணுட்டு வற்றோம், பள்ளிக்கூடத்துக்கு போனவன் இப்போ சித்தால் வேலைக்கு போயிட்டு இருக்கான், எங்களுக்கு விடிவுகாலம் எப்போ வரப்போகுதோ கடவுளே, அப்டின்னு கடவுள் மேல பாரத்த போட்டு குடும்ப சுமைய சுமந்துட்டு இருக்கோம்” என்று தங்களின் வேதனையை தெரிவிக்கின்றார்.

வெடி விபத்து
வெடி விபத்து

”பட்டாசுத் தொழில்தா எங்க வாழ்வாதாரம், எங்க உசுரு ஓடுரது பட்டாசுத் தொழிலால தான், அது இல்லன்னா பட்டினியா கிடந்து சாகவேண்டியதுதான். கரிமருந்துல தெனந்தெனம் செத்துட்டுதா இருக்கோம், எங்க பிள்ளைங்களுக்காக. பட்டாசுத் தொழில்ல எப்போ என்ன வேணாலும் நடக்கும்ன்னு தெரிஞ்சும் உயிரோட செத்து செத்து பொழச்சுட்டு இருக்கோம். இந்த கஷ்டமெல்லாம் எங்க பிள்ளைங்க படக்கூடாதுன்னுதா, பட்டாசுத் தொழில் செஞ்சுட்டு இருக்கோம். இதவிட்டா எங்களுக்கு வேர தொழிலும் தெரியாது. இதையும் தடை பண்ணீங்கன்னா நாங்க எங்க போவோம். பட்டாசு அவசியமான்னு கேக்குறவங்களுக்கு தெரியாது அது பல பேரோட அத்தியாவசிய தொழிலா இருக்குன்னு தெரியமாட்டிக்கி” என்றனர்.

வெடி விபத்து
வெடி விபத்து

தடையை நீக்க கோரிக்கை: பட்டாசுத் தொழில் மீது போடப்பட்ட பல்வேறு தடைகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பட்டாசுத் தொழிலில் கோடிக்கணக்கில் முதலீடுகளை போட்டுவிட்டு தற்போது தாங்களும் பல்வேறு பொருளாதரச் சிக்கலில் தவிப்பதாகவும் பட்டாசுத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் எங்களின் இழப்பீடுகளை சரிசெய்வதற்க்கும் பட்டாசுத் தொழில் மீது போடப்பட்ட தடைகளை நீக்குமாறும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெடி விபத்து
வெடி விபத்து

ஆனால், நாம் மாற்றுத்தொழிலை நோக்கிதான் செல்லவேண்டும் என்ற சூழ்நிலையில் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பிரதான கோரிக்கையாக வைப்பது அழகர் அணை திட்டம் தான். சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் தொழிலான பட்டாசுத் தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் தான் வாழ்வாதாரத் தொழிலாக இருக்கும் என்பது பல்வேருடைய கருத்து. இந்த நிலையில், கந்தக பூமி என்று கருதப்படும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பசுமை நிறைந்த பூமியாக மாற்றுவதற்கு அழகர் அணை தேவை என்பது அவர்களின் கோரிக்கையாகவும், அவர்களின் மாற்றுத்தொழிலாகவும் அமையும் என்று சிவகாசி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெடி விபத்து
வெடி விபத்து

இதையும் படிங்க: இந்தியா ஒருபோதும் போரை முதல் வாய்ப்பாக கருதாது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.