பட்டாசு ஆலையை விதியை மீறி உள்குத்தகைக்கு விட்டால் வழக்கு - விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

author img

By

Published : Jan 22, 2023, 9:31 AM IST

கோப்புப்படம்

பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது எனவும், அவ்வாறு விடப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர்: பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது எனவும், அவ்வாறு விடப்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஏற்படும் வெடி விபத்துக்களைக் குறைப்பது மற்றும் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வெள்ளிக்கிழமை(20.01.2023) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் நடைபெறும் விபத்துகளைத் தவிர்ப்பது தொடர்பாக பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விபத்துகளைக் குறைக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரால் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், பட்டாசு ஆலைகள் உரிமதாரர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும், உரிமதாரர்கள் தங்களது பட்டாசு தொழிற்சாலைகளை விதிமுறைகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு உள்குத்தகைக்கு விடக் கூடாது எனவும், ஆய்வின் பொழுது, உள்குத்தகை விடப்பட்டது கண்டறியப்படின், மேற்படி பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், உள் குத்தகை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீதும் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், மேற்படி ஆலைகளின் உரிமங்கள் நிரந்தரமாக இரத்து செய்வதுடன், ஆலை உரிமதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் பட்டாசு உற்பத்திக்கான உரிமங்கள் பெறுவதிலிருந்து நிரந்தரமான தடை உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிறப்பு ஆய்வுக் குழுக்களைத் தவிர்த்து, மாவட்ட அளவிலான உயர் அலுவலர்களால் பட்டாசு தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும், உயர் அலுவலர்கள் மற்றும் சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஆய்வு செய்யும்பொழுது, அதிகப்படியான பணியாளர்கள், அதிகளவிலான வெடி பொருட்கள் இருப்பு வைத்தல் மற்றும் தயாரித்தல் மற்றும் உள்குத்தகை போன்ற மிகக் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 304-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், மேலும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக வீடுகளிலும், அனுமதி பெறாத இடங்களிலும் கருந்திரி உள்ளிட்ட இதர பட்டாசுகள் தயாரிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும், போர்மேன், மேலாளர் மற்றும் இரசாயனக் கலவைப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு சிவகாசி தொழிலகப் பாதுகாப்பு பயிற்சி மையத்தின் சார்பாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி பயிற்சி நடவடிக்கைகளை முழுமைப்படுத்தும் நோக்கில், குறுகிய காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் பயிற்சி கால அட்டவணை தயார் செய்யப்பட்டு, முன் கூட்டியே அறிவிப்பு செய்யப்படும்.

மேற்படி பயிற்சியில் கலந்து கொள்ளாத தொழிற்சாலைகளின் மீது உரிய விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், ஆதலால் வெடி விபத்துகளைத் தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் அனைவரும் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் தொழில் செய்து, விபத்தில்லா விருதுநகரை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி அவர்களால் தெரிவிக்கப்பட்டது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக கடத்தல் கரன்சி பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.