நெருங்கும் தீபாவளி - சோகத்தில்  பட்டாசு வியாபாரிகள்

author img

By

Published : Oct 29, 2021, 6:53 PM IST

Updated : Oct 29, 2021, 8:14 PM IST

தீபாவளி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கியும் வியாபாரம் சூடுபிடிக்காததால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தி, இனிப்பு பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த கொண்டாட்டத்தில் மிக முக்கியமான ஒன்று பட்டாசு. பட்டாசு தயாரிப்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மாதங்களுக்கு முன் வரும் ஆடிப்பெருக்கு தினத்தன்று பூஜை போட்டு வியாபாரிகள் பட்டாசு விற்பனையை தொடங்குவர். அதைத்தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை காலங்களில் பட்டாசு விற்பனை களைகட்டி தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை, கரோனா காரணமாக உற்பத்தி பாதிப்பு, பசுமை பட்டாசு கெடுபிடி உள்ளிட்டவற்றால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை நாட்களிலும் எதிர்பார்த்த அளவு விற்பனை நடைபெறவில்லை.

மூலப்பொருட்கள் விலை உயர்வு

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், "நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகள் அதிகளவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும், அதிக சத்தம் எழுப்பும் வெடிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி நேர கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்க வேண்டும். பட்டாசு தொழிலையே நம்பி உள்ள சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோகத்தில் பட்டாசு வியாபாரிகள்

கரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களிலிருந்து பட்டாசு ஆர்டர்கள் குறைந்துள்ளது. பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை உயர்ந்து விற்பனை மந்தமாகியிருக்கிறது" என்றார்.

பூச்சட்டி பட்டாசுகள் - புதுவரவு

மேலும் கூறுகையில், "இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பூச்சட்டி பட்டாசு வகைகள் சிறுவர்கள், இளைய தலைமுறையினரை கவரும் விதமாக குளிர்பான டின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாட்டர் குயின் என்ற பட்டாசு, புது ரக பென்சில் பட்டாசு, உதயசூரியன் வடிவில் பட்டாசு என பலவகையான பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விதவிதமாக ஒலி எழுப்பும் இரவு நேரத்தில் வெடிக்கும் வண்ண பட்டாசுகளும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆன்லைன் பேமென்ட் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

பசுமை பட்டாசுகள்

பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர் கூறுகையில், "ஆண்டுதோறும் சிவகாசி பட்டாசு கடைகளுக்கு நேரடியாக வந்து பல்வேறு ரகங்களை பார்த்து விவரம் கேட்டு பட்டாசுகளை வாங்கி செல்கிறேன். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு ஆபத்தை விளைவிக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தது மகிழ்ச்சி. பசுமை பட்டாசுகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்" என்றார்.

பசுமை பட்டாசுகள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும், பட்டாசு தொழிலாளர்களின் நலன் காக்கவும், தொழிலை பாதுகாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஜெயலலிதா பரப்புரை வாகனத்தில் சென்று தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை!

Last Updated :Oct 29, 2021, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.