ஊராட்சி மன்றத் துணை தலைவர் வெட்டிக்கொலை!

author img

By

Published : Aug 20, 2021, 10:13 PM IST

Murder

விருதுநகர்: வச்சக்காரப்பட்டி அருகே ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கூலிப் படையினரால் இன்று (ஆக. 20) வெட்டி கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (45). இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஜெயஆர்த்தி (5), ஜெயபூர்த்தி (5) என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள்.
அனந்தராமன் கடந்த 2006 முதல் 2016 வரை வச்சக்காரப்பட்டி ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர். 2016இல் இந்த ஊராட்சி தனி ஊராட்சியானது. தற்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவராக அனந்தராமன் பொறுப்பு வகித்து வந்தார்.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் லாரிகளும் இயக்கி வந்தார். இந்நிலையில் அவரிடம் பணியாற்றும் குருசாமி என்பவரது திருமணம் தடங்கம் கிராமத்தில் இன்று (ஆக. 20) காலை நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்த அனந்தராமன் மணமக்களை வாழ்த்திவிட்டு தனது காரில் ஏறுவதற்காக சாலைக்கு வந்த போது இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் அனந்தராமனை அரிவாள், கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து எஸ்.பி மனோகர், டி.எஸ்.பி அருணாச்சலம், வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் தொடர்பாக அனந்தராமனுக்கும் ஊராட்சி தலைவி ஜெயபண்டியம்மாள் என்பவரது கணவர் பாலமுருகன் என்பவருக்கும் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அனந்தராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்தது யார் என்பது குறித்து வச்சக்காரபட்டி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.