'அது வேற வாய் இது நாற வாய்' கரும்பு கொள்முதலில் கறார் கட்டிய கலெக்டர்!

author img

By

Published : Jan 7, 2023, 4:22 PM IST

கரும்பு கொள்முதல் குறித்து விவசாயிகளிடம் ஆட்சியர் பேச்சு

ஆறடிக்கு குறைவாக கரும்பு ரேசன் கடைகளில் கொடுத்தால், வடிவேலு காமெடி போல அது வேற வாய் இது நாற வாய் என வாதம் செய்வீர்கள், என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதல் குறித்து விவசாயிகளிடம் ஆட்சியர் பேச்சு

விழுப்புரம்: விவசாயிகளின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆறடி நீள செங்கரும்பு இணைத்து வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் பிடாகம், குச்சிப்பாளையம், மரகதபுரம் ஆகிய பகுதிகளில் செங்கரும்புகளை வாங்குவதற்காக, கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து ஆறு அடி கரும்புகளை கொள்முதல் செய்யும் பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குச்சிப்பாளையம் கிராம பகுதியில் உள்ள கரும்புகளை அதிகாரிகள் வாங்கச் சென்ற போது, விவசாயிகள் ஆறு அடிக்குக் குறைவான 5 அடி, ஐந்தரை அடிக் கரும்புகளைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி கரும்புகளை வெட்டவிடாமல் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும், கரும்புகளை விவசாயிகள் வெட்ட அனுமதிக்காமல் வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் இதுகுறித்த மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் மோகன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகள் தங்களிடமிருந்து 6 அடிக்குக் குறைவான கரும்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறினர். அப்போது ஆட்சியர் மோகன், "தமிழ்நாடு முதலமைச்சர் 6 அடிக் கரும்புகளை மட்டுமே பெற அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி தான், கரும்புகளைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.

இதற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, தொடர்ந்து அவர்களுடன் பேசிய ஆட்சியர் மோகன் ”நானும் ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தான் வந்தவன். விவசாயிகள் படும் கஷ்டங்கள் எனக்கும் தெரியும். ஆனால் அரசாணையில் உள்ளது படி தான் கரும்பு கொள்முதல் செய்ய முடியும். இன்றைக்கு 6 அடிக்குக் குறைவான கரும்பினை கொள்முதல் செய்தால் பிரச்சனைகள் ஏற்படும். இந்த கரும்புகளைக் கொள்முதல் செய்து அதனை நீங்கள் தான் வாங்க நியாயவிலைக்கடை கடைகளில் வாங்க உள்ளீர்கள்.

இப்போது கரும்பு கொள்முதல் செய்யுங்கள் என்று கூறிவிட்டு அதன் பின் வடிவேல் நகைச்சுவையைப் போல "அது வேற வாய் இது நாற வாய்" என்பது போல், அப்போது ரேசன் கடையில் 6 அடிக்குக் குறைவான கரும்பினை வழங்கினால், நீங்களே முதலமைச்சர் கூறியது இல்லாமல் 6 அடிக்குக் குறைவாகக் கரும்பு வழங்கப்படுவதாக வாதம் செய்வீர்கள். அதனால் ஆறடிக்கு குறைவான கரும்புகளை பெறமாட்டோம்” என திட்ட வட்டமாகத் தெரிவித்துச் சென்றார்.

இதையும் படிங்க: Sugarcane: கூட்டுறவுத் துறையில் முறைகேடு? - அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.