கக்கனூர் முதல் கலிபோர்னியா வரை கல்விக்காக பள்ளியை மேம்படுத்தும் முன்னாள் மாணவர்!
Updated on: Feb 11, 2021, 7:55 PM IST

கக்கனூர் முதல் கலிபோர்னியா வரை கல்விக்காக பள்ளியை மேம்படுத்தும் முன்னாள் மாணவர்!
Updated on: Feb 11, 2021, 7:55 PM IST
விழுப்புரம்: கிராமப்புற ஏழை மாணவர்களின் கற்றலில் இருக்கும் சவால்களை உடைத்தெறியும் வகையில் நவீன அறிவியல் உத்திகளுடன் கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு சூழலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கில் கலிபோர்னியாவுக்கு பயணித்த புனித சிறுமலர் அரசு தொடக்கப்பள்ளியின் முன்னாள் மாணவர் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை விடிவெள்ளியாக திகழ்கிறார். அவர் குறித்த செய்தித்தொகுப்பு...
விழுப்புரம் மாவட்டம் கானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கக்கனூர் கிராமம். இந்தக் கிராமத்தை சுற்றியுள்ள துரவிதாங்கள், போரூர், புதுப்பேட்டை, அரியலூர், திருக்கை, புதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே மூன்று தலைமுறைகளாக அறியாமை இருளைப் போக்கி பெரும் பங்கு புனித சிறுமலர் அரசு உதவிபெறும் பள்ளியை சாரும்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்து விடக்கூடாது என்கின்ற நோக்கத்திற்காக 1927ஆம் ஆண்டு இந்தப் புனித சிறுமலர் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது அரசு உதவிபெறும் உயர்நிலை பள்ளியாக தனது கல்வி சேவையை சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் பெஞ்சமின் சின்னப்பன், அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் அரசு ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார்.
தான் பிறந்த கிராமத்திலிருந்து கலிபோர்னியாவுக்கு சென்று தனது இலக்கினை வித்திட்ட பெஞ்சமின் அதற்கு கல்வி ஒன்றே முக்கிய காரணம் என்பதை உணர்ந்தார். கல்வியின் அவசியத்தை பெற்றோர்கள் உணர்ந்திருந்தாலும் கிராமப்புற ஏழை மாணவர்களின் கற்றலில் இருக்கும் சவால்களை உடைத்தெறியும் வகையில் நவீன அறிவியல் உத்திகளுடன் கற்றல் மற்றும் திறன் வளர்ப்பு சூழலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று எண்ணினார்.
நகரங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இரண்டு தளங்களைக்கொண்ட புதிய கட்டடம் ஒன்றை சுமார் ஒன்றரை கோடி மதிப்பில் கட்டிக்கொடுத்து புனித சிறுமலர் பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் கனவை மெய்ப்பித்து இருக்கிறார்.
தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூபாய் 60 லட்சமும் மீதமுள்ள நிதியினை தனது வெளிநாட்டு நண்பர்களிடமும் பெற்று தான் படித்த பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இங்குள்ள எட்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் சாதனைப் பெண்கள், வரலாற்றுத் தலைவர்கள், உத்வேகம் அளிக்கும் பொன்மொழிகள், எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும் அறிவுள்ள தகவல்கள், நவீன ஓவியங்கள், கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, நூலகம், அறிவியல் ஆய்வகங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை ஆகிய அத்தனையும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "நாங்கள் மேல்நிலை கல்வி கற்க கிராமத்திலிருந்து தினந்தோறும் காலை, மாலை சுமார் 25 கிலோமீட்டர் பயணம் செய்து விழுப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் நிலை இருந்தது. ஆனால் தற்போது இங்கே எங்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி கிடைக்கிறது. அதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவர், சமூக ஆர்வலர் அருட்தந்தை பெஞ்சமினுக்கும் அவரது நண்பர்களுக்கும் நன்றி" எனக் கூறினார்.
"மேல்நிலை வகுப்புகளுக்கு தொலைதூரம் அனுப்ப வேண்டிய நிலை இருந்ததால் பெண் பிள்ளைகளின் கல்வி பெருமளவு தடைப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. எங்கள் கிராமத்திலேயே கல்வி கற்கும் சூழல் உருவாகிவிடும் எனப் பெற்றோர்களும்" நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" கல்வியே ஒருவனின் வாழ்வில் சிறந்த செல்வமாக இருக்க முடியும் எனும் திருவள்ளுவர் வாக்குப்படி தனது கிராமத்திற்கு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெஞ்சமின் பெரிதும் உறுதுணையாக இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்திக்கொண்டு கல்வி சேவையை தொடர்ந்து வழங்க காத்திருக்கும் புனித சிறுமலர் பள்ளிக்கு விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் உரிய அங்கீகாரம் அளித்து சுற்றுவட்டார கிராமங்களில் 100 விழுக்காடு கல்வியறிவு விகிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க... கல்வி கற்க தினமும் 24 கி.மீ., பயணம்... விளிம்பு நிலை வாழ்க்கையிலிருந்து விளம்பரத் தூதரான பெண்!
