மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!
செஞ்சி அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழுப்புரம்: செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நள்ளிரவில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தேங்காய் சூடம் ஏற்றி “ஓம் சக்தி.. பராசக்தி.. அங்காளம்மா தாயே..அருள் புரிவாயே..” என கூறி அங்காளம்மனை வழிபட்டனர்.
