TN Assembly: வரும் 20-ல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

author img

By

Published : Jan 9, 2023, 10:45 PM IST

TN Assembly: ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 20-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம்: சிபிஎம் கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாகவும், இந்தி மொழியை தமிழக மக்கள் மத்தியில் திணிப்பதுமாக அவருடைய தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

ஒவ்வொரு முறையும் அவர் வெளியிடும் கருத்துகள் ஆனது தமிழக மக்களுக்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு அடிப்படை தொண்டராகவும் செயல்பட்டு வருகிறார். காசி தமிழ்ச் சங்க நிகழ்வில் தமிழக இளைஞர்களை அனுப்பி தமிழர்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகிறார். இன்றைய சட்டப்பேரவை முதல் ஆண்டின் கூட்டத்தொடரில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் வகையில், இந்திய சட்டமன்ற வரலாற்றிலேயே முதல் கூட்டத்தொடரில் எந்த ஒரு ஆளுநரும் நடந்து கொள்ளாத விதமாக தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தார்.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்கிற உணர்வு கூட இல்லாமல் மத்திய அரசின் பிரதிநிதியாக இன்று நடந்து கொண்டுள்ளார். இன்றைய சட்டசபை கூட்டத்தில் மாநில அரசு வெளியிடும் அறிக்கையை ஆளுநர் படிக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் அவர் தன் போக்காக சில குறிப்பிட்ட வரிகளை படிக்காமல், ஏதோ குறிப்பிட்ட கட்சியின் தொண்டராகவே இன்று நடந்து கொண்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிடாமல் இன்று சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியுள்ளார். இது தமிழக சட்டசபை மரபுகளை மீறிய ஒரு செயல். தமிழக அரசு தயாரித்த சட்டசபை தொகுப்பில் திராவிட மாடல், பெண்ணுரிமை போன்ற பல முக்கிய வரிகளை கடந்து இன்று தன்னுடைய உரையை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து சட்டசபையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர், ஆளுநர் உரையாற்றிய மற்றும் நீக்கிய பதிவுகளை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும் என சபாநாயகர் இடம் வேண்டுகோள் விடுக்கும்பொழுது, ஆளுநர் சட்டசபை மரபை மீறி எழுந்து சென்ற நிகழ்வு மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும், தமிழக மக்களுக்கு எதிராகவும், தமிழின மரபுகளை மீறும் விதமாக ஒரு குறிப்பிட்ட கட்சியின் சாயம் பூசிய அடிப்படைத் தொண்டராக விளங்கும் ஆளுநரை உடனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 20-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரம்பை மீறினாரா ஆளுநர்..? - சட்ட வல்லுநரின் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.