பெண் உயர் அலுவலர் பாலியல் வழக்கு: செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆஜர்

author img

By

Published : Sep 2, 2021, 5:38 PM IST

பெண் எஸ்.பி பாலியல் புகார் வழக்கு

பெண் காவல் கண்காணிப்பாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

விழுப்புரம்: 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தனக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்தவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் காவல் கண்காணிப்பாளர் முன்னதாக புகாரளித்தார்.

அதனடிப்படையில், முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி தாக்கல்செய்தனர்.

இந்த நிலையில், புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபியாக இருந்தவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் நீதிமன்றத்தில் நாள்தோறும் நடைபெற்றுவருகிறது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த விசாரணையில் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி முன்னிலையாகி, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மனு தாக்கல்செய்தார். அன்று முன்னாள் சிறப்பு டிஜிபி முன்னிலையாகவில்லை.

மனுவைப் பெற்றுக்கொண்ட நீதிபதி கோபிநாதன், வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து இன்று நடைபெற்ற விசாரணையில் செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையானார். அவரை இவ்வழக்கிலிருந்து விடுவிக்கக் கோருதல் தொடர்பாக அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.