வேலூர் அருகே காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!

வேலூர் அருகே காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு!
Girl found dead in Gudiyatham: பள்ளிக்குச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவி காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்த நிலையில், ரயில் தண்டவாளத்தில் மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா - ஜோதி தம்பதியினர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இவர்களது மகள் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (நவ.20) பள்ளிக்குச் சென்ற மாணவி, பள்ளி முடிந்து வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், குடியாத்தம் காவல் நிலையத்தில், பள்ளிக்குச் சென்ற மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று (நவ.21) காலை குடியாத்தம் அடுத்த குருநாதபுரத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், ஒரு பெண் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலமாக கிடந்த பெண்ணை பார்த்தபோது, அவர் காணாமல்போன பத்தாம் வகுப்பு மாணவி என உறுதி செய்துள்ளனர்
பின்னர், அந்த மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தது குறித்து குடியாத்தம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
