திருச்சி சிவா - கே.என்.நேரு ஆதரவாளார்கள் மோதல்: காவல் நிலையம் சூறையாடல்; பெண் காவலர் காயம்!

author img

By

Published : Mar 16, 2023, 7:48 AM IST

Etv Bharat

திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியது, பெண் காவலருக்கு காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் வார்டு கவுன்சிலர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சிவா எம்.பி. - அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளார்கள் மோதல்

திருச்சி: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனியில் நமக்கு நாமே திட்டத்தில், நவீன இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், நகர பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாநகராட்சி உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்பவர்கள் வரிசையில், எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை. இது தவிர, திறப்பு விழா கல்வெட்டிலும் எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது தவிர, எம்.பி. திருச்சி சிவா வீட்டின் வழியாக, அந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சென்று உள்ளனர்.

அரசு திட்டத்தில், விளையாட்டு அரங்கம் துவக்க விழாவில், திருச்சி சிவா எம்.பி.க்கு அழைப்பு விடுக்காதது, கல்வெட்டில் அவரது பெயர் இல்லாததும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதனால் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்ற போது, சிவாவின் ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இருப்பினும், அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்.பி. வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ரகளையில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல்துறை வேனில் ஏற்றினர். தொடர்ந்து, எம்.பி. ஆரதவாளர்கள், செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றனர். அங்கு சென்ற அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவா எம்.பி.யின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அதை தடுக்க முயன்ற பெண் போலீஸ் சாந்தி என்பவரும் காயமடைந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, திருச்சி சிவா எம்.பி. தரப்பில் சூர்யா குமாரும், அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் 54-வது வட்டச் செயலாளர் மூவேந்திரர் ஆகியோர் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

மேலும், அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் புகுந்து ரகளை செய்து, பெண் போலீசாரை காயப்படுத்திய அமைச்சர் நேரு தரப்பினர் மீது, போலீசார் 10 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். திருச்சியில் தி.மு.க. எம்.பி. ஆதரவாளர்களும், திமுக அமைச்சரின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியது, பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியது தொடர்பாக 10 பிரிவின் கீழ் திமுக மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது அமர்வு நீதிமன்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

திமுக பிரமுகர் திருப்பதி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் ஆகியோர் கண்டோன்மென்ட் காவல் நிலைய குற்றப்பிரிவில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். கைதான 5 பேரையும் வரும் 29ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: இன்ஸ்டா ரீல்ஸ் தமன்னா கஞ்சா வழக்கில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.