"அதிமுகவுடன் கைகோர்ப்பேன்" - திருமாவளவன் கூறிய காரணம்...

author img

By

Published : May 24, 2023, 2:53 PM IST

'அதிமுகவோடு நான் கை கோர்ப்பேன்’ - திருமாவளவன்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். பூரண மதுவிலக்குக்காக போராட்டம் நடத்தினால் அதிமுகவுடன் கைகோர்க்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இன்று (மே 24) சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர்தான் தலைவராக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டமே அதைத்தான் உறுதிபடுத்துகிறது.

புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டியுள்ள நிலையில், அதன் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. திட்டமிட்டே உள்நோக்கத்தோடு குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக மரபை சிதைக்கும் வகையில் மோடி அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவின்போது, அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போதும் குடியரசுத் தலைவர் அழைக்கப்படவில்லை. இது திட்டமிட்டு செய்த நடவடிக்கைதான். அது மட்டுமல்லாமல், மே 28ஆம் நாள் என்பது சாவர்க்கரின் பிறந்தநாளாக உள்ளது.

சனாதான தர்மத்தை நிலைநாட்ட பெரிதும் பாடுபட்டவர், சாவர்க்கர். அவர் பிறந்தநாளில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களுக்காக நாங்கள் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளோம். இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவரும் அழைக்கப்பட வேண்டும்.

திறப்பு விழா தேதியும் மாற்றப்பட வேண்டும். கர்நாடகா தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில் பிரதிபலிக்கும். மோடி அரசுக்கு கர்நாடக மக்கள் அளித்த தீர்ப்பு, அவர்களின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான தீர்ப்பு. கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்னை, முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு ரத்து போன்றவற்றை செய்து மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் பாஜகவினர் ஈடுபட்டார்கள்.

அதன் காரணமாக இந்துக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு அளித்து, இந்துக்கள்தான் பாஜகவை தோல்வி அடைய செய்தார்கள். 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இது பிரதிபலிக்கும். கர்நாடக அமைச்சரவை பொறுப்பேற்பு விழாவில் எங்களுக்கு அவமரியாதை நடக்கவில்லை. முறைப்படிதான் எங்களுக்கு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

கள்ளச்சாராய மரணம் மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. முழு மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை வலியுறுத்தி மக்கள் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். கள்ளச்சாரயத்தால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்திருப்பது, முதலமைச்சர் அதை மனிதாபிமான அடிப்படையில் அணுகி இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது. கள்ளச்சாரயத்தை ஊக்குவிக்கிறது என விமர்சிக்கக் கூடாது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தினால், அவர்களோடு நான் கை கோர்ப்பேன். நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமையக் கூடாது. அது நாட்டுக்கு நல்லதல்ல. அது அமைந்தால் சனாதனவாதிகளுக்குத்தான் வலு சேர்க்கும். சாதிப் பெயரில் பட்டங்கள் வழங்குவது விளம்பரத்திற்காக செய்யும் வேலை. தேவையில்லாத வேலை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஜனநாயகத்தின் ஆன்மா பறிப்பு" நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவை புறக்கணித்த 19 கட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.