மதவாத அரசியல் வெற்றி பெறாது - முத்தரசன் பேட்டி

author img

By

Published : Jan 26, 2022, 11:07 AM IST

முத்தரசன்

தமிழ்நாட்டில் மதவாத அரசியல் வெற்றி பெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளாட்சித் தேர்தல் குறித்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறது. நல்லரசை அங்கீகரிக்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்தி, மேற்கு வங்க ஊர்தி, கேரளா ஊர்தி அனுமதிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

மேற்கு வங்க ஊர்த்தியில் சுபாஷ் சந்திரபோஸ் உருவம் இருந்ததை அங்கீகரிக்காத மோடி டெல்லியில் அவர் பிறந்த நாளின் போது அவருக்கு சிலை அமைக்கும் நிகழ்ச்சியில் பணிவாக பேசினார். சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் வாங்கிய செவாலியர் பட்டத்தை மோடிக்கு வழங்கி இருப்பார்.

ஒன்றிய அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளன. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவளிக்கும்.

ஒகேனக்கல் 2ஆவது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனிததன்மையற்றது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த பிரச்சினை மட்டுமல்ல அனைத்து பிரச்சனைகளையும் கட்சி பாகுபாடின்றி அனைவரும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கலாம். தமிழ்நாடு மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அதை ஏலம் விடப்போகிறோம்” என அறிவித்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், “இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியாத அரசாக மோடி அரசு இருக்கிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். படகுகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுகவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம். தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழ்நாட்டில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பாஜக வினர் இணைத்து வருகிறார்கள். சிறிய பிரச்சனையை மதப்பிரச்சனையாக்கி அரசியல் ஆதாயம் தேடலாம் என பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் அவ்வாறெல்லாம் அவர்களால் வெற்றி பெற முடியாது.

எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம். இதை சட்டம் போட்டெல்லாம் தடுக்க முடியாது. எத்தனை மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் அதை அழிக்க தான் பாஜக முயற்சி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மதவாத அரசியல் வெற்றி பெறாது.

தமிழ்நாட்டில் தேர்வினால் 25 மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள். அது குறித்தெல்லாம் அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு பாஜக வினர் நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் விரும்புகிறார்களா அல்லது ஒருவருக்கொருவர் மோதி கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களா என்பதை விளக்க வேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த நிதி போதாது. கூடுதலாக வழங்க வேண்டும். தமிழ்நாடு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றிய அரசு சார்பில் உயர்மட்ட குழு வந்து பார்வையிட்டார்கள். ஆனால் தற்போது அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. அரசு கேட்ட நிதியையும் அவர்கள் வழங்கவில்லை. குஜராத்தில் பாதிப்பு என்றால் துடித்து போகும் மோடி தமிழ்நாட்டிற்கு பாதிப்பு என்றால் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கட்-ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.