தரக்குறைவாகப் பேசிய எஸ்.ஐ. - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைக் கடை உரிமையாளர்கள்

author img

By

Published : Sep 17, 2021, 12:34 PM IST

jewellery-shop-owner-protest-against-ambur-si

நகைக்கடை உரிமையாளரைத் தரக்குறைவாகப் பேசிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம்பூர் நகர காவல் நிலையத்தை நகைக்கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த காஞ்சனா (64) என்பவரது வீட்டில் 10 சவரன் தங்க நகைகள், பணம் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, அவரது வீட்டின் மாடியில் குடியிருந்த இளைஞர் அருண்குமாரை காவலர்கள் கைதுசெய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், காஞ்சனா வீட்டில் இல்லாதபோது நகைகளைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆம்பூர் பகுதியில் உள்ள இரண்டு நகைக்கடைகளில் அந்த நகைகளை அடைமானம் வைத்து பணம் வாங்கியதாகவும் விசாரணையில் அருண்குமார் கூறியுள்ளார். அதனடிப்படையில், அவர் அடகு வைத்த நகைகளை காவல் நிலையத்தல் ஒப்படைக்குமாறு நகைக்கடை உரிமையாளரிடம் ஆம்பூர் நகர காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்தபோது, கடை உரிமையாளருக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைக்கடை உரிமையாளர்கள்

அப்போது, உதவி ஆய்வாளர் நகைக் கடை உரிமையாளரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி, நகைக்கடை உரிமையாளர்கள் ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தையும் அடைத்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

மேலும், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர்.

jewellery shop owner protest against ambur si
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நகைக் கடை உரிமையாளர்கள்

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் நகைக்கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தால், சுமார் இரண்டு மணிநேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஜோலார்பேட்டையில் செய்தியாளரை தாக்கிய அதிமுகவினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.