அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்... ஏன் விசாரணையில் தாமதம்? அரசியல் வாதிகள் தலையீடு காரணமா?

அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்... ஏன் விசாரணையில் தாமதம்? அரசியல் வாதிகள் தலையீடு காரணமா?
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தில் எஸ்பி கையிலிருந்த குற்றவாளிகளான அரசியல் பிரமுகர்களை விட்டுவிட்டு காவல் துறை கண்துடைப்பு நாடகம் போடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர்: அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வதில், காவல் துறை ஆளும் கட்சியான திமுகவினருக்கு சாதகமாக இருந்துகொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆரிப் நகரைச் சேர்ந்த சவுகத் அலிகான் மகன் சாதிக் அலி (24). இவர் தனது குடும்பத்துடன் காரில் இன்று (மே 14) கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் கோட்டத்திற்குட்பட்ட அரசு போக்குவரத்து பேருந்தை ஓட்டுநர் பெரியசாமி ஓட்டி வந்துள்ளர். இதற்கிடையே சாதிக் அலி என்பவர் காரில் ஒரு வழிப்பாதையில் வந்ததைத் தொடர்ந்து, எதிரே வந்த அரசு பேருந்து மீது உரசி விபத்து ஏற்பட்டது.
இதனால், பேருந்தின் ஓட்டுநரான பெரியசாமிக்கும் காரின் ஓட்டுநரான சாதிக் அலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாதிக் அலி அரசு பேருந்து ஓட்டுநர் மீது அப்பகுதியில் இருந்த அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால், திமுக பிரமுகர்கள் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை கண்துடைப்பு செய்வதாகவும், திமுக அரசியல் பிரமுகர்கள் தலையீட்டால் காவல் துறை தடுமாறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
