’100% தடுப்பூசி செலுத்திய கிராமங்கள் ஆயிரத்தை தாண்டும்’ - மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Sep 12, 2021, 11:31 AM IST

மா.சுப்பிரமணியன்

மெகா கரோனா தடுப்பூசி முகாம் மூலமாக இன்று மாலைக்குள் 100 விழுக்காடு தடுப்பூசி எடுத்துக் கொண்ட கிராமங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்.12) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம், எல்லை நாயக்கன்பட்டி துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதன்மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 805 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, 55 ஆயிரத்து 272 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பான செயல் திறனைக் கருத்தில்கொண்டு கூடுதலாக தடுப்பூசி வழங்கப்பட்டு 74 ஆயிரத்து 730 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் டிவி பரிசாக வழங்கும் நடவடிக்கை, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இலக்கைத் தாண்டி சாதனை படைப்போம் என நம்புகிறோம். தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

4 கோடி பேர்

ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை மூன்று கோடியே 51 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டு, மூன்று கோடியே 74 லட்சத்து எட்டாயிரத்து 989 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் மூலமாக இன்று மாலைக்குள் தமிழ்நாட்டில் நான்கு கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நிலை எட்டப்படும்.

நீட் தேர்வு கட்டுப்பாடுகள் தளர்வு

அண்டை மாநிலங்களிலிருந்து கரோனா, நிபா நோய்கள் பரவலைத் தடுக்க ஒன்பது மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் 500 கிராமங்களில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை இன்று மாலைக்குள் ஆயிரத்தை தாண்டும் என நம்புகிறோம். இன்று நடைபெறும் நீட் தேர்வில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான கட்டுபாடுகள் தளர்க்கப்பட்டு மென்மையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.