'விவசாயிகள், மீனவர்கள் இறந்தபோது ரூ.10 லட்சம் கொடுக்கவில்லை' - மே18 இன எழுச்சி மாநாட்டில் சீமான் உரை!

author img

By

Published : May 19, 2023, 12:00 PM IST

காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய சீமான்.. 2024 தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைப்பேச்சு

தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சியின் மே 18 இன எழுச்சி நாள் மாநாடானது, தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மைதானத்தில் நேற்று (மே 18) நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய சீமான், “விஷச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்த பரமாத்மாவை பார்த்து இருக்கிறீர்களா? குற்றவாளிகளுக்கும் குடும்பம் உள்ளது என்கின்றனர்.

அப்படியென்றால், அனைத்து குற்றவாளிகளுக்கும் 10 லட்சம் ரூபாய் கொடுங்கள். ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து சிறைக்குச் சென்றவனின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுங்கள். எப்படிப்பட்ட ஒரு ஆட்சி? திராவிட மாடல் ஆட்சி, இப்படி ஒரு கேவலப்பட்ட மாடல் ஆட்சி என்று நினைக்கவில்லை.

விவசாயிகள், மீனவர்கள் இறந்தபோது 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை. இரண்டு ராணுவ வீரர்கள் பஞ்சாப்பில் இறந்து போனார்கள். பணம் கொடுக்கவில்லை. ஆனால் பேனா சிலை, சமாதிக்கு பணம் எங்கிருந்து வந்தது? இதற்கு ஒரு நாள் கணக்கு சொல்ல வேண்டி வரும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 20 பெண்கள், 20 ஆண்களுக்கு வாய்ப்பு கொடுத்து, 40 தொகுதியிலும் தனித்து போட்டியிட உள்ளது. 2026 தேர்தலிலும் தனித்துதான் போட்டி. எத்தனை தேர்தல் வந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இதில் ஒரு குழப்பமும் இல்லை. வாக்குக்கு காசு கொடுப்பது என்பது ஒரு பண்பாடு.

தேர்தல் என்றால் வாக்குக்குப் பணம் தான். பணம் இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம். ஒவ்வொரு மாவட்டத்தைப் பொறுத்து விலை. வாக்குக்குப் பணம் கொடுத்தால் ஊழல், லஞ்சம் ஒழிப்பு சாத்தியமில்லை. நீட் தேர்வு எழுதச்செல்லும் பிள்ளைகளின் மூக்குத்தி, தோடு கழற்றப்படுகிறது. தேர்வு எழுதப் போகும்போது நல்ல மனநிலையில் போக வேண்டும்.

ஆனால், இவ்வாறு ஒரு சம்பவம் மன நிலையைக் கெடுக்கும். சீக்கியர்கள் தேர்வு எழுதும்போது தலைப்பாகையை கழற்ற முடியுமா? இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் இந்த சித்ரவதை நடக்கின்றதா? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நீட் வந்தது. இதனை அப்போது திமுக வரவேற்றார்கள். காங்கிரஸ் தான் என்ஆர்சி, நீட், ஜிஎஸ்டி போன்ற அனைத்தையும் கொண்டு வந்தது.

காங்கிரஸார் கூறுகின்றனர், கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் ஆட்சியை வென்று விட்டோம் என்று. உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல் காரணமாகத்தான் பத்தாண்டுகள் காலம் மக்கள் உங்களை தூக்கிப் போட்டார்கள். தோல்விக்குக் காரணம், பாரதிய ஜனதா கட்சியின் மோடியும், அமித் ஷாவும் தான் என்கின்றனர். அங்கு பாஜக இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

அதன் காரணமாகவே காங்கிரஸுக்கு ஓட்டு விழுந்தது. உங்களின் நீர் வளம் அவனுக்கே என்றால், என்னுடைய நீர் வளம் எனக்கு. ஓஎன்ஜிசி குழாய் போடப்பட்டால் அனைத்தையும் பிய்த்து விடுவேன். சுங்கச்சாவடியை ஒரே இரவில் பொக்லைன் வைத்து அகற்றி விடுவேன்.

சாலைக்கு வரி, டீசலுக்கு வரி, வீடு கட்டும்போது செங்கலுக்கு வரி, சிமென்ட்டுக்கு வரி, தண்ணீருக்கு வரி, வீடு யாரும் கட்ட முடியாது. வரி கட்டி சாக வேண்டியதுதான். அது சட்டம் இல்லை, ஒரு திட்டம். பள்ளிக்கூடக் கட்டடம் சிதலமடைந்துள்ளது. அதை கட்டமைக்க நிதி இல்லை.

அங்கு தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர், உள்ளூரிலிருந்து கொடையாளர்கள் ஒருங்கிணைந்து கட்டி வருகின்றனர். பள்ளிக்கூடத்தைச் சீரமைக்கப் பணம் இல்லை. சமாதி வைப்பதற்கும், பேனா வைப்பதற்கும் நிதி எங்கிருந்து வருகிறது? இதற்கு பதில் உள்ளதா? சமாதி வைக்க, பேனா வைக்க கோடிக்கணக்கில் பணம் எங்கு இருந்து வந்தது?

இந்தப் பணம் அநீதியால் கட்டமைக்கப்பட்டது. இதனை கட்சி ஆட்சியால் ஒன்றும் பண்ண முடியாது. புரட்சியால்தான் புரட்டிப் போட முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘இனி கஷ்டம் வந்தால் கள்ளச்சாராயம் குடித்தால் போதும் ரூ.10 லட்சம் கிடைக்கும்’ - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.