ETV Bharat / state

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது: 20 பவுன் நகை, 2 பைக் பறிமுதல்

author img

By

Published : Sep 1, 2021, 8:37 AM IST

தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

robbery
robbery

தூத்துக்குடி: மாவட்டத்தில் அதிகரித்துவரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும்பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் காவல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்யவும் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை, சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

"தூத்துக்குடி மாவட்டம் ஊரக காவல் கோட்டத்திற்குள்பட்ட புதுக்கோட்டை, தட்டப்பறை, சிப்காட் காவல் நிலைய பகுதியில் வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும்பொருட்டு குற்றச் செயல்கள் நடைபெற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மேலக்கூட்டுடன்காடு ஊரைச் சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி பாரதி செல்வம், நாகராஜ் என்பது தெரியவந்தது.

இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், பாரதி செல்வத்தையும், நாகராஜையும் தனிப்படையினர் கைதுசெய்து அவர்களிடமிருந்து 20 பவுன் நகை, இரண்டு இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஏழு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகளும், தட்டப்பாறையில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதவிர தெர்மல் நகர், முத்தையாபுரம் ஆகிய இரு காவல் நிலைய எல்லைகளில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 23 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் காவல் துறையினருக்குப் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் பணியில் ஈடுபடுகிறது. இனி கிராமப்புறங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் சீர்மிகு நகரம் திட்ட வேலைக்காக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தாமதப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் கயத்தாறு, மணியாச்சி உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஆறாயிரம் கேமராக்களுக்கு மேல் பொருத்தி பணி முழுமையாக முடிந்துவிட்டது.

தூத்துக்குடி நகரில் சீர்மிகு நகரம் திட்ட வேலைகள் முடிவடைந்ததும் விடுபட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெறும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.