அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவாரூரில் நேற்று (மே 13) ஹோட்டலுக்கு சாப்பிட வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இன்று (மே 14) அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்: முத்துப்பேட்டையில் ஹோட்டல் நடத்தி வருபவர் ராமானுஜம் (50). இவரது ஹோட்டலுக்கு நேற்றிரவு (மே 13) கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சுபகான் மகன் சிக்கந்தர் பாட்சா (37) என்பவர் குடும்பத்துடன் சாப்பிட வந்துள்ளனர். அப்போது, கூடுதலாக பில் போட்டதாக கூறி பணம் கொடுப்பதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் அங்கிருந்த பொருள்கள் சேதமாகின.
இதனால், ஆத்திரமடைந்த ஹோட்டல் தரப்பினர் கேரளாவிலிருந்து வந்த வாகனத்தின் டயரை சேதப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓட்டல் தரப்புக்கு ஒரு தரப்பு ஆதரவாளர்களும் கேரளாவிலிருந்து வந்தவர்களுக்கு மற்றொரு தரப்பு ஆதரவாளர்களும் கூட்டமாக கூடினர்.
இதனால் இருதரப்பினருக்குள் மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியதால் முத்துப்பேட்டை டிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு திரண்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து ஹோட்டல் உரிமையாளர் ராமானுஜம் கொடுத்த புகார் மீதும் அதேபோல் கேரளாவிலிருந்து வந்த சிக்கந்தர் பாட்சா கொடுத்த புகார் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 14) அதிகாலை சுமார் 4 மணிக்கு முத்துப்பேட்டை செம்படவன்காடு ஈசிஆர் சாலையிலுள்ள அதிமுக நகர இளைஞரணி துணைச் செயலாளர் சந்திரபோஷ் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். வெளிச்சத்தை கண்டு வீட்டில் இருந்தவர்கள் வாசலில் வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் பைக் எரிந்துகொண்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சையடைந்த அவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து சந்திரபோஷ் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்தும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நேற்றிரவு ஹோட்டலில் நடந்த சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பிரமுகர் சந்திரபோஸின் மகன் ராம் என்பவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதில் மோதல் - ஓட்டுநரை அரிவாளால் வெட்டியவர் கைது
