'தமிழ்நாட்டில் நெல் காப்பீட்டுத் திட்டம் ரத்து பெரும் ஏமாற்றம்'

author img

By

Published : Aug 23, 2021, 6:46 AM IST

Updated : Aug 23, 2021, 8:43 AM IST

mannargudi farmers  farmers leader pandian  mannargudi farmers leader  நெல் காப்பீடு திட்டம்  விவசாயிகள் வேதனை  நெல் காப்பீடு திட்டம் ரத்து  காப்பீடு திட்டம்  வெள்ளை அறிக்கை  paddy insurance scheme canceled  paddy insurance scheme  farmers suffer on paddy insurance scheme canceled  thiruvarur news  thiruvarur latest news  திருவாரூர் செய்திகள்

தமிழ்நாட்டில் நெல் காப்பீட்டுத் திட்டத்தினை முற்றிலும் ரத்துசெய்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது எனத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ''தமிழ்நாட்டில் நெல் காப்பீடு செய்வதை முற்றிலும் தடைசெய்திருப்பது உழவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. இது உழவர்களை மீண்டும் தற்கொலைக்குத் தூண்டும் செயலாகும்.

நடப்பு ஆண்டில் குறுவைக்கு பயிர் காப்பீடு செய்திட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது, சம்பாவிற்காவது பயிர் காப்பீடு செய்து இழப்பீடு பெறலாம் என்றிருந்த உழவர்களுக்கு, அதுவும் இன்று மறுக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது.

இதிலிருந்து உழவர்களைப் பாதுகாப்பதற்காக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு உழவர்களுக்கு வேளாண் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

மோடி அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தனியாரை அனுமதித்ததால், வணிக நோக்கத்தோடு செயல்படும் நிலை ஏற்பட்டு முழுமையாக உழவர்கள் பயன்பெற முடியாத நிலை தொடர்ந்தது. இதனால் தமிழ்நாடு அரசு தமக்கென தனி காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கிட வேண்டுமென உழவர்கள் வலியுறுத்திவருகிறோம்.

உழவர்களை வஞ்சிக்கும் செயல்

மத்திய, மாநில அரசுகள் காப்பீடு செய்வது, இழப்பீடு பெறுவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வழிமுறைகளைக் கண்டறியாமல் காலம் கடத்தின. தற்போது காப்பீட்டுத் திட்டத்தையே தமிழ்நாடு அரசு நெல்லுக்கு ரத்துசெய்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது உழவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

மேலும் 2021-22 சாகுபடி பருவத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்ய தடைவிதித்திருப்பதும், அதற்குப் பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் தமிழ்நாடு அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்

மத்திய அரசின் கொள்கைப்படி உழவன் தனது நிலத்திற்கு காப்பீடு செய்து இழப்பீடு பெறுவது உரிமையாகும் என்ற நோக்கத்தில் சட்டமாகக் கொண்டுவரப்பட்ட திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தன் விருப்பத்திற்கு நெற்பயிர் காப்பீடு செய்வதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பது தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும்.

மர்மம்

தமிழ்நாடு அரசு கூற்றுப்படி காப்பீட்டுத் திட்டத்திற்கு மாற்றாக பாதிப்புக்கு ஏற்ப பேரிடர் நிதியில் இழப்பீடு கொடுப்பது உண்மையாக இருக்குமேயானால், இடுபொருள் இழப்பீட்டிற்கும், அறுவடை இழப்பீடு வழங்குவது குறித்தும், உழவர்களின் பங்களிப்பு குறித்தும் விரிவான விவாதத்திற்குள்படுத்தி உரிய விளக்கம் அளித்திருக்க வேண்டும்.

அவசர கோலத்தில் அறிக்கை விடுவதால் வேளாண்மை அழிவதற்கு மட்டுமே வழிவகுக்கும். 2020- 21 ஆண்டுக்கான காப்பீடு செய்த உழவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

காப்பீட்டுக்கான பிரீமிய தொகையில் மத்திய அரசின் பங்கீட்டில் 16 விழுக்காட்டைக் குறைத்துக் கொண்டதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு இழப்பீடு வழங்குவது குறித்து நடவடிக்கைகள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கிறது.

வெள்ளை அறிக்கை

தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்குவது குறித்து வாய்த் திறக்க மறுப்பது, நம்பிய உழவர்களை ஏமாற்ற முயற்சிக்கும் செயலாகும். காப்பீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

எனவே காப்பீடு குறித்து தமிழ்நாடு அரசு திறந்த மனத்தோடு உழவர்களோடும், சட்டப்பேரவையிலும் விவாதிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மறுக்கும்பட்சத்தில் காவிரி டெல்டா உழவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை வரும் 31ஆம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு!

Last Updated :Aug 23, 2021, 8:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.