தூங்கிக்கொண்டிருந்த பெண் உயிருடன் எரித்துக் கொலை: அதிகாலையில் பயங்கரம்!

author img

By

Published : Jan 20, 2022, 9:18 AM IST

தூங்கிக்கொண்டிருந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை

துரிஞ்சாபுரம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றனர். இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

திருவண்ணாமலை: துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட மேல்பாலானந்தல் கிராமத்தின் அருகேயுள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பச்சையப்பன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவருக்கு தேவகி (51), இந்திரா காந்தி (47) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சகோதரிகள் ஆவர். இதில் தேவகிக்கு குழந்தைகள் இல்லை. இந்திராகாந்திக்கு மணிகண்டன் (30) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

அலறல் சத்தமும், கருகிய தேவகியும்

மகள்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்துவருகின்றனர். கிராமத்தில் தேவகி, இந்திரா காந்தி, மணிகண்டன், அவரது மனைவி ஆகிய நான்கு பேரும் ஒன்றாக வசித்துவந்தனர்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று தேவகி வீட்டின் நுழைவு வாயில் அருகே உள்ள அறையிலும், மற்றவர்கள் வீட்டிற்கு உள்ளேயும் தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் திடீரென தேவகியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, தேவகி மீது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தீயை அணைத்தனர். ஆனால் தேவகி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தேவகி தூங்கிக் கொண்டிருந்த இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

மங்கலம் டூ கலசபாக்கம் காவல் விசாரணை

இது குறித்து மணிகண்டன் மங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் ஹேமமாலினி, உதவி ஆய்வாளர் சத்யநாதன், காவலர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்பவம் நடந்துள்ள பகுதி கலசபாக்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி என்பதால், மங்கலம் காவல் துறையினர் இது குறித்து கலசபாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கலசபாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கேனுடன் சென்ற யார் அந்த நபர்?

மேலும், இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் மண்ணெண்ணெய் கேன் எதுவும் இல்லை.

இதனால் தேவகி மீது யாரோ மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு கேனுடன் சென்றிருப்பதால் கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து காவல் துறையினர் தேவகிக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பமடைந்த மாணவி மரணம்: மறைத்த தலைமையாசிரியர், வார்டன் கைது

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.