மண்ணைத் திருடி விற்றேனா? - அண்ணாதுரை எம்.பி.யின் விளக்கம் இதுதான்!
Published: May 22, 2023, 10:28 PM


மண்ணைத் திருடி விற்றேனா? - அண்ணாதுரை எம்.பி.யின் விளக்கம் இதுதான்!
Published: May 22, 2023, 10:28 PM
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மண்ணை திருடி விற்பனை செய்ய நினைப்பவர்கள் கூட யாரும் மண்ணை திருட மாட்டார்கள்; அப்படி இருக்க தன் மீது பரப்பப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அண்ணாதுரை எம்.பி. விளக்கம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை காஞ்சி ரோடு கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, “திருவண்ணாமலையில் ஆன்மிகப் பயணம் லட்சக்கணக்கான பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த திட்டங்களில் வேண்டுமென்று உள்நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. சாலை விரிவாக்கப் பணி தரமற்ற முறையில் நடப்பதாகவும், இங்கு எடுக்கப்படும் மண் விற்பனை செய்யப்படுவதாகவும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “ஒவ்வொரு கட்டமாக அரசு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மண் நெடுஞ்சாலை துறையால் எடுக்கப்பட்டு நெடுஞ்சாலைத் துறையினரால் பல்வேறு இடங்களில் கொட்டப்படுகிறது. ஆனால் பொய்யான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் ஆன்மிக மண், இதை யாரும் விற்க மாட்டார்கள் விற்பதற்கான எண்ணம் கூட யாருக்கும் வராது. ஏனென்றால் இந்த மண் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதம் பட்ட மண். சிவன் சொத்துக் குலநாசம் என்பார்கள். விற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இதை விற்க மாட்டார்கள். சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்த ஒப்பந்த நிறுவனங்கள் தான் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யான உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று முதலமைச்சரும், அமைச்சரும் வழி நடத்தி உள்ளார்களோ அதன்படி தான் தாங்கள் நேர்மையுடன் இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம் - யார் யாரைச் சந்திக்கிறார்?
