ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக ஆகலாம்.. ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது - திருச்சி சிவா
Updated on: Jun 24, 2022, 8:20 AM IST

ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக ஆகலாம்.. ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது - திருச்சி சிவா
Updated on: Jun 24, 2022, 8:20 AM IST
யாரை ஆலயத்துக்குள் நுழையக் கூடாது என்று கூறினார்களோ, அவர்களை அர்ச்சகர் ஆக்கியது திமுக தான் என அககட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக ஆகலாம் ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது என்றும் அவர் கூறினார்.
திருவள்ளூர்: திருவள்ளூரில் திமுக இளைஞரணி சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திமுகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, ராஜீவ் காந்தி ஆகியோர் கலந்துகொண்டு திராவிடர் பயிற்சிப் பாசறையை தொடங்கி வைத்து பேசினார்கள். திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேசும் போது, "இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்திய குடியரசுத் தலைவராக ஆகலாம், ஆனால் ஒரு ஆலயத்தின் அர்ச்சகராக ஆக முடியாது.
அதுபோல சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் ஆக முடியாது. இது கூடாது என்பது தான் திராவிட மாடல். யாரை ஆலயத்துக்குள் நுழையக் கூடாது என்று கூறினார்களோ அவரை அர்ச்சகர் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். நீ உள்ளே வரக்கூடாது என்றான், அவர்களை உள்ளுக்குள் கொண்டு வருவதற்குச் சட்டம் கொண்டு வந்த கட்சி இந்த திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி.
இழுக்கு துடைக்கப்பட வேண்டும். கையில் காசு பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவமானம் இருக்கக்கூடாது. நம்மை யாரும் இழிவாகப் பேசக்கூடாது. நம் குடும்பத்தில் இருப்பவர்களைப் பார்த்துத் தாழ்த்தி இன்னொருவன் பார்க்கக்கூடாது என்று வாழ்கிறவன் மட்டும்தான் மனிதன். அந்த சுயமரியாதை உணர்வைத் தந்த பேரியக்கம் இந்த திராவிட முன்னேற்றக் கழகம்" என்றார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா கூறுகையில், "திமுகவில் புதிய உறுப்பினர்களாகச் சேரும் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினருக்கு திமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளைக் குறித்து புதிய உறுப்பினர்களுக்கு விளக்கி உள்ளது.
மேலும் மக்களுக்காகத் திராவிட இயக்கம் எவ்வளவு சாதனை புரிந்துள்ளது என விளக்கியதுடன், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள எனக்கு மற்ற கட்சி குறித்து அக்கறை இல்லை. மடியில் கனம் இருந்தால் தான் பயம் இருக்கும் மடியில் கனமில்லை எங்களுக்குப் பயமில்லை. எனவே அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளைக் கண்டு அஞ்சப் போவதில்லை. அக்னிபத் திட்டத்தை திமுக நாடாளுமன்றத்தில் எதிர்க்கும்" என்றார்.
இதனிடையே, திருச்சி சிவாவின் மகன் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் மகனையே ஒதுக்கி வைத்ததாகச செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அதைப் பற்றி தற்போது கூற விரும்பவில்லை என்றார். மேலும், திருச்சியில் அவரது மகன் சூர்யா கைது செய்யப்பட்ட குறித்த கேள்விக்கு அது பற்றி எனக்கு தெரியாது எனவும் பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் திருத்தணி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
