'உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகம்' - தளவாய் சுந்தரம்

author img

By

Published : Sep 18, 2021, 8:32 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம்

திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகம் என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் தலைமையில் இன்று (செப்.18) நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் வெற்றி வியூகம், கூட்டணி கட்சிகளின் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம்

அதிகார பலத்தை பயன்படுத்தும் திமுக

கூட்டத்துக்குப் பின்னர் தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு, தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கான இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை திமுக ரத்து செய்வதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியால், மக்கள் அதிமுகவை ஆதரிக்கும் நிலைக்கு மாறிவிட்டனர். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பிரகாசமாக உள்ளது.

குறுகிய காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இட ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்படும் என்பதால் மட்டுமே பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. ஆளுங்கட்சியான திமுக அதிகார பலத்தை பயன்படுத்தி அமைச்சர்களை களமிறக்கி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது.

நீட் தேர்வு விலக்குக்கு அழுத்தம்

இதன் காரணமாகவே இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனை எதிர்த்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது சந்தேகமே.

உள்ளாட்சித் தேர்தலின் போது வன்முறை, அராஜகம் போன்றவைகளில் திமுகவினர் ஈடுபடுவது வழக்கம். நீட் தேர்வில் அதிமுக கொண்டுவந்த சட்ட முடிவைத்தான் திமுகவும் கொண்டுவந்துள்ளது. கூடுதலாக அந்த சட்ட முன்வடிவில் ஏ.கே ராஜன் கமிட்டி அறிக்கையை சேர்த்துள்ளனர்.

நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளதால், நீட் தேர்வு விலக்கு குறித்து ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். நீட் தேர்வு விலக்கு குறித்து, குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என். ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.