’எஸ்பிபி நினைவிடத்தில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைப்பு’ - எஸ்பி சரண்

author img

By

Published : Sep 25, 2021, 9:43 PM IST

எஸ்பி சரண்

மறைந்த பாடகர் எஸ்பிபி நினைவிடத்தில் அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அவரது மகன் எஸ்பி சரண் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர்: இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என அனைவராலும் அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பி.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி.,க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நல்லபடியாக தேறி வந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஒருமணியளவில் அவர் உயிரிழந்தார்.

எஸ்பி சரண் பேசுவது தொடர்பான காணொலி

அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

பின்னர் அவரது உடலானது திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியிலுள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்.25) அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலரும் எஸ்பிபியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த பாடகர் எஸ்பிபி சிவ பக்தர் என்பதால், இன்று (செப்.25) அவருடைய நினைவிடம் சிவலிங்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தவும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.

அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவியத் தொடங்கினர். இருப்பினும் கரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள், ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மணி மண்டபம் அமைக்க நடவடிக்கை

எஸ்பிபியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், அவரது மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கரோனா காலத்தால் அப்பா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் அனுமதி தரவில்லை. இதற்காக பொதுமக்கள், ஊடகங்கள் மன்னிக்க வேண்டும்.

அப்பா விட்டுச் சென்ற பணிகளை, நான் தொடர்ந்து செய்து வருகிறேன். ஒரு ஆண்டு அப்பா இல்லாமல் வருத்தத்தில் உள்ளேன். அவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கு அருங்காட்சியகம், திரையரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசிடம் உதவி கேட்கவிருக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: எஸ்பிபி மறைந்த தினம்: நினைவுகூர்ந்த மோகன்லால், மம்மூட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.