ETV Bharat / state

திருச்செந்தூர் பாத யாத்திரை செல்பவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் தடை

author img

By

Published : Jan 6, 2022, 5:15 PM IST

இரவு நேர ஊரடங்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதால், திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்துசெல்வதைத் தவிர்க்க வேண்டும் என நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் தடை
திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் தடை

திருநெல்வேலி: இரவு நேர ஊரடங்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதால் திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடந்துசெல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் கரோனா விதிமுறைகளை மீறிய காரணத்துக்காகக் கடந்த ஒரு வாரத்தில் 5000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலை, ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மேலும் நாளை முதல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்களுக்குத் தடைவிதிக்கப்பட்ட உத்தரவும் நடைமுறைக்குவருகிறது. இந்த நிலையில், நெல்லை மாநகரில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "இன்றுமுதல் கரோனா பரவல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதையொட்டி உணவகங்கள், திரையரங்குகள், பிற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மருந்துக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அதற்காக மருந்துச் சீட்டுகளைக் காட்டி தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் நடவடிக்கை

ஊரடங்கில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது, அத்தியாவசிய பணிகளைத் தவிர அனைத்து விஷயங்களுக்கும் பொதுமக்கள் அந்த நேரத்தில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் முன்னதாகவே தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இரவு ஊரடங்கு என்பதால் திருச்செந்தூர் பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் முடிந்தளவு இரவு 10 மணிக்கு மேல் நேரத்தில் பாத யாத்திரை செல்வதைத் தவிர்த்து கரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் 5000 வழக்குகள்

கடந்த ஒரு வாரமாகவே நெல்லை மாநகரில் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிவதைக் கண்காணித்துவருகிறோம் ஒரு வாரத்தில் விதியை மீறியோர் மீது 5000 வழக்குகள் போட்டுள்ளோம், அதன்மூலம் அதிகம் பேர் முகக்கவசம் அணிகின்றனர். இதனால் கரோனா பரவல் குறையும்.

வணிக நிறுவனங்கள் சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அதற்கு முன்பாகவே வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும். இரவு 10 மணிக்குப் பிறகு எந்தவித நகர்வும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில்களுக்குச் சேர வேண்டிய குத்தகை, வாடகையை உடனே வசூலிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.