பிரபல ஆம்னி சொகுசுப்பேருந்தில் குட்கா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த நெல்லை போலீசார்

author img

By

Published : Sep 20, 2022, 10:54 PM IST

பிரபல ஆம்னி சொகுசு பேருந்தில் குட்கா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த நெல்லை போலீசார்..

பெங்களூருவில் இருந்து பிரபல ஆம்னி சொகுசுப்பேருந்தில் குட்கா போதைப் பொருட்கள் கடத்தி வந்த நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, 150 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை: தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக காவல்துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் போதை பொருள் தொடர்பாக அவ்வப்போது சோதனை நடத்தி வரும் நிலையில் பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் பிரபல சொகுசு ஆம்னிப் பேருந்து ஒன்றில் குட்கா, போதைப்பொருள் கடத்துவதாக நெல்லை மாநகர காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் மேலப்பாளையம் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் வைத்து பெங்களூருவில் இருந்து வந்த இன்டர்சிட்டி ஸ்மார்ட் பஸ் என்ற ஆம்னி சொகுசுப்பேருந்தை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்றுள்ளார்.

உடனே காவல் துறையினர் தங்கள் வாகனத்தில் மின்னல் வேகத்தில் சினிமா பாணியில் துரத்திச் சென்று நாங்குநேரி அருகே அந்த ஆம்னிப்பேருந்தை மடக்கிப்பிடித்தனர். பின்னர் உள்ளே சோதனையிட்டபோது பேருந்தின் வெளிப்புறத்தில் உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் சுமார் 10 மூட்டையில் போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர்களான பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரன், அருண்குமார் மற்றும் உதவியாளர் பசவராஜ், குட்காவை வாங்க வந்த வியாபாரியான நெல்லை நாங்குநேரி அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்த ராமதாஸ் ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் ஆம்னி பேருந்து மற்றும் குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பேருந்தில் மொத்தம் சுமார் 150 கிலோ குட்கா போதைப்பொருள் இருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’குட்கா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே அவற்றின் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இன்று ரகசியத்தகவலின் பெயரில் ஆம்னிப்பேருந்தை மடக்கி பிடித்துள்ளோம்.

பிரபல ஆம்னி சொகுசுப்பேருந்தில் குட்கா கடத்தல்; சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த நெல்லை போலீசார்

அதில் சுமார் 150 கிலோ குட்கா போதைப்பொருள் இருந்ததையடுத்து வாகனத்தில் இருந்த நான்கு பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து இந்த போதைப்பொருள் எங்கே யாருக்கு எடுத்துச்செல்லப்படுகிறது என விசாரித்து வருகிறோம்.

விசாரணைக்குப்பிறகு இதில் தொடர்புடையவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வங்கி கணக்கை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் பேருந்தின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருட்கள் உரிமையாளரின் ஆதரவோடு தான் எடுத்து வரப்பட்டதா அல்லது உரிமையாளருக்குத் தெரியாமல் ஊழியர்கள் இது போன்ற சட்டவிரோதச்செயலில் ஈடுபட்டு வருகிறார்களா என்பது குறித்தும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

பயணிகளை ஏற்றிச்செல்லும் பிரபல சொகுசு ஆம்னிப்பேருந்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ஓபியம் போதைப்பொருள் விற்பனை: இருவருக்கு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.