நெல்லையில் விதிகளை மீறிய குவாரிகள் அபராதம் செலுத்தினால் அனுமதி அளிக்க அரசு தயார் - டி.ஆர்.பி.ராஜா

author img

By

Published : Jul 26, 2022, 7:03 PM IST

திருநெல்வேலியில் விதிகளைமீறிய குவாரிகள் அபராத தொகையை செலுத்தினால் அனுமதி அளிக்க அரசு தயார் - டிஆர்பி.ராஜா

திருநெல்வேலியில் விதிமீறிய கல்குவாரிகளுக்கு அரசு விதித்துள்ள குறைந்தபட்ச அபராதத் தொகையை செலுத்தினால் குவாரிகளுக்கு அனுமதி அளிக்க அரசு தயாராக இருப்பதாக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் டிஆர்பி.ராஜா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுத்தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அக்குழுவினர் இன்று திருநெல்வேலி மாவட்டம் வருகை தந்து பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

குறிப்பாக பொன்னாக்குடி அருகே நதிநீர் இணைப்புத்திட்டம், மகராஜநகர் ரயில்வே மேம்பாலப்பணிகள், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல் பாளையங்கோட்டை மேடை காவல் நிலையத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளையும் பார்வையிட்டனர். இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

கூட்டத்துக்குப் பிறகு குழுவின் தலைவர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'கடந்த 2 நாட்களாக தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த பிறகு இங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து பேரவை தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலியில் குடிநீர் பிரச்னை அதிகம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாநகரில் மொத்தம் 44 உயர்மட்ட நீர்த்தேக்கத்தொட்டிகள் உள்ளன. இதில் 15 தொட்டிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது, மீதமுள்ள 29 தொட்டிகளில் பத்து நாட்களுக்குள் பணிகள் நிறைவடைந்து தண்ணீர் முழுமையாக வழங்கப்படும் என அலுவலர்கள் உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

நாங்குநேரி பொருளாதார மண்டலம் சிட்கோ மூலம் புதுப்பிக்கப்படும் தியாகராஜநகர் ரயில்வே மேம்பாலம் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, சிறப்புக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மாநில நெடுஞ்சாலைப்பணிகள் ஏற்கெனவே நடைபெற்ற நிலையில் ரயில்வே வேலை தற்போது தொடங்கிவிட்டது. வெகு விரைவில் பணியை முடிக்க இலக்கு நிர்ணயித்து வரும் 2023 ஜனவரிக்குள் ரயில்வே பணிகளை முடித்துவிடுவார்கள். ஏப்ரல் மாதம் பணி நிறைவு பெற்று பாலம் திறக்கப்படும்.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மண் கிடைப்பதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். கல் குவாரி விபத்தில் நான்கு பேர் பலியானதைத்தொடர்ந்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து குவாரிகளில் ஆய்வு செய்து விதிமீறிய குவாரிகளுக்கு குறைந்தபட்ச அபராதம் விதித்துள்ளது.

இந்த தொழிலில் அதிகம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எனவே, அரசு சிறிய அபராதம் தான் விதித்துள்ளது. ஆனால் அதைக் கட்டாமல் சிலபேர் நீதிமன்றம் சென்றுள்ளனர்.

எனவே, அரசு விதித்த குறைந்தபட்ச அபராதத்தை செலுத்த முன்வந்தால் அனுமதி கொடுக்க அரசு முன்வரும். மாநகரில் சாலைப்பிரச்னை குறித்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள். திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான திட்டமிடல் இல்லாமல் நடைபெறுகிறது.

நெல்லையில் விதிகளை மீறிய குவாரிகள் அபராதம் செலுத்தினால் அனுமதி அளிக்க அரசு தயார் - டி.ஆர்.பி.ராஜா

குறிப்பாக வ.உ.சி மைதானத்தில் திட்டமிடல் இல்லாமல் மைதானத்தை சீரமைத்து வருகின்றனர். எனவே, அங்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்’ எனத்தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ உள்பட பிற குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் புதிய பதவிகளுக்கான பட்டியல் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்படும் - வைத்திலிங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.