பல் பிடுங்கிய விவகாரத்தில் கலெக்டர் தனது கடமையை செய்யத் தவறிவிட்டார்: ஹென்றி திபேன் பரபரப்பு குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 17, 2023, 10:41 PM IST

Updated : Apr 17, 2023, 10:57 PM IST

Etv Bharat

பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் காவல் நிலையங்களில் நேரடியாக சிசிடிவிகளை பறிமுதல் செய்து ஆய்வு செய்திருந்தால் எவ்வித விசாரணையும் தேவையில்லை எனவும்; இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாகவும் மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரத்தில் கலெக்டர் தனது கடமையை செய்யத் தவறிவிட்டார்: ஹென்றி திபேன் பரபரப்பு குற்றச்சாட்டு

நெல்லை: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்டப் பகுதியில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் என்பவர் கொடூரமான முறையில் இரக்கமின்றி பிடுங்கிய சம்பவம் வெளியாகி விஸ்வரூபத்தை எடுத்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் மூலமாக இந்த கொடூரமான செயலில் ஈடுபட்ட பல்வீர் சிங் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் சார் ஆட்சியரிடம் நடந்தவை குறித்து விளக்கம் அளித்த நிலையில், இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பல்வீர் சிங் விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய விவகாரத்தில் அவர் மீது உயர் மட்ட விசாரணையை மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து இரண்டாம் கட்டமாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.17) விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ’’அம்பாசமுத்திரம் பகுதியில் வன்கொடுமை என்பது நடைபெற்று உள்ளது. விசாரணைக் கைதிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பற்களை பிடுங்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் அப்போதே மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பறிமுதல் செய்து இருக்க வேண்டும். அப்படி பறிமுதல் செய்திருந்தால் இந்த விசாரணையே தற்போது தேவையில்லை. உச்ச நீதிமன்றத்தில் காவல் நிலையத்தில் நடவடிக்கை தொடர்பான விதிமுறைகள் எதுவுமே அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மூன்று கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் காவல் நிலையத்தின் உள்ளேயும் வெளியேவும் அனைத்து பகுதிகளிலுமே கண்காணிப்பு கேமராவினைப் பொறுத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், நெல்லை மாவட்டத்தில் 213 கேமராக்கள் தான் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் கொடுத்துள்ளார்கள். அம்பாசமுத்திரத்தில் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங்கை கைது செய்ய வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கையாகும்’’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எனது பேரன் சூர்யாவை காணவில்லை - தாத்தா புகார்

Last Updated :Apr 17, 2023, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.