நெல்லையில் ஒரு லிட்டர் பாலின் விலை 7000 ரூபாய்; ஷாக்கா இருக்கா?
Updated on: May 17, 2022, 8:01 PM IST

நெல்லையில் ஒரு லிட்டர் பாலின் விலை 7000 ரூபாய்; ஷாக்கா இருக்கா?
Updated on: May 17, 2022, 8:01 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர் மாநிலத்திலேயே முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கி உள்ளார். இந்த பண்ணையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நெல்லை: கழுதை இனம் அழிவு நிலையில் உள்ளன. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 62 விழுக்காடு கழுதைகள் அழிந்துள்ளன. இந்தியாவில் 1,40,000 கழுதைகளும், தமிழ்நாட்டில் வெறும் 1,428 கழுதைகளும் மட்டுமே உள்ளன என்றால் நிலைமையை புரிந்துகொள்ளலாம். இந்தியாவில் தமிழ்நாட்டின் நாட்டு கழுதைகள், மகாராஷ்டிராவின் கத்தியவாடி கழுதைகள், குஜராத் ஹல்லாரி கழுதைகள் என மூன்று வகைகள் வளர்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு முழுவதுமே மொத்தமாக ஆயிரம் கழுதைகள் மட்டுமே உள்ளன. இதில் நெல்லை சேர்ந்த பாபு என்பவர் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 100 கழுதைகளை வாங்கி பண்ணை அமைத்துள்ளார். இங்கு வளர்க்கப்படும் கழுதையிடம் இருந்து எடுக்கப்படும் கழுதைப்பால் பெங்களூருவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூருவில் கழுதைப்பால் மூலம் அழகு சாதனப் பொருட்கள், சோப்பு, முகச் சாயம் போன்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்த கழுதைப் பாலில் பல அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. தாய் பாலுக்கு நிகராக ஊட்டச்சத்து கொண்டுள்ளது. குறிப்பாக, சிறந்த மருத்துவ குணம் கொண்டது.
இதனால் உலக அளவில் கழுதை பாலுக்கு அதிக கிராக்கி உள்ளது. நம் மாநிலத்தில் ஒரு வேலையை சரியாக செய்யவில்லை என்றால் கழுதை மேய்க்க தான் லாயக்கு என்று வசைப்பாடுவதை கேட்டிருப்போம். ஆனால், இன்றைய நாளில் கழுதை வளர்ப்பவர்கள் அதிகளவில் வருமானம் ஈட்டிவருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் கழுதை பண்ணை தொடங்கி உள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மே 14இல் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை 7000 ரூபாய். இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டில் கழுதை வளர்ப்பு விரைவில், பெரும் வளர்ச்சி அடையும்" என்றார்.
இதையும் படிங்க:தர்மபுரியில் கழுதைப் பால் விற்பனை அமோகம்
