ஓபிஎஸ்க்கு அணிவகுப்பு மரியாதையா?-காணாமல் போன போலீசால் பரபரப்பு..

author img

By

Published : May 13, 2022, 6:05 PM IST

போலீஸ் மரியாதைக்கு தகுதியானவரா ஓபிஎஸ்? - திருமண நிகழ்வில் சர்ச்சை

திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக நெல்லை சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு அணிவகுப்பு மரியாதைக்காக போலீசார் சீருடையுடன் காத்திருந்தனர். பின்னர் ஓ.பி.எஸ் வரும் முன்பே இவர்கள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று நெல்லை மாவட்டம் மேலச்செவலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றார். இந்த திருமணம் நடைபெற்ற மண்டபத்தின் வாசல் முன்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அரசு ரீதியாக சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே பதவி வகித்து வருகிறார்.

அப்படி இருக்கையில், அவருக்கு எப்படி போலீஸ் மரியாதை வழங்கப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “வழக்கமாக ஐஜி மற்றும் அதற்கு மேல் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் முதல்வர்களுக்கு காவல்துறை சார்பில் 'கார்ட் ஆப் ஹானர்' என்ற மரியாதை செய்யப்படும். அதேபோல் முன்னாள் முதல்வர்களுக்கும் 'கார்ட் ஆப் ஹானர்' என்ற மரியாதை வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.

எனவே ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்ற முறையில் அவருக்கு மரியாதை வழங்குவதற்காக காவலர்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஓபிஎஸ் அரசு நிகழ்ச்சி அல்லாமல் முழுக்க முழுக்க தனது சொந்த பழக்கத்தின் அடிப்படையில் திருமணத்தில் பங்கேற்ற போது, அவருக்கு மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டது மீண்டும் சந்தேகத்துடன் கூடிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இந்த விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை சென்றதால் ஓ,பன்னீர்செல்வத்திற்கு மரியாதை செலுத்தக் காத்திருந்த காவலர்கள் மிகவும் அவசரமாக அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். இது குறித்து மேலும் காவல்துறை வட்டாரத்தில் விசாரிக்கையில் ”அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது மட்டுமே முன்னாள் முதல்வருக்கு மரியாதை வழங்க விதிமுறை இருக்கிறது. ஆனால், இது போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மரியாதை வழங்கக்கூடாது” எனத் தெரிவித்தனர்.

இருப்பினும் மாவட்ட காவல்துறையிடையே உள்ள தவறான அணுகுமுறையால் இந்த குழப்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனை தொடர்பு கொண்டபோது அவர் மீட்டிங்கில் இருப்பதாக பதில் கூறிவிட்டார். இந்நிகழ்வு காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையில் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.