நெல்லை பாஜக தலைவர் கைது - அதிரடி காட்டிய மாநகராட்சி ஆணையர்

author img

By

Published : Nov 22, 2022, 7:39 AM IST

Etv Bharat

திருநெல்வேலியில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்ட விவகாரத்தில் அம்மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுக்கான பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்....

திருநெல்வேலி: சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய கட்சியான பாஜக நான்கு இடங்களை பிடித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் அக்கட்சியை வலுப்படுத்த பாஜக மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனத்தை தொடர்ந்து அவரது அதிரடியான நடவடிக்கையால் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் பாஜக மீது எழுந்து வருகிறது.

இருப்பினும் இதுவும் கட்சியின் ஒருவித வளர்ச்சியாகவே பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். அதேபோல் சமீப காலமாக தமிழ்நாட்டில் பாஜக சார்பில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்துக்களை இழிவாக பேசியதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சில மாதங்கங்களுக்கு முன் கோயமுத்தூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சியால் ஏலம் விடப்படும் விவகாரத்தில் அரசு ஊழியர்களிடம் அத்துமீறிய நெல்லை மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாநகராட்சிகளில் மாடுகள் சாலைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றதை தொடர்ந்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சியால் ஏலம் விடப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. முதல் கட்டமாக மேலப்பாளையம் பகுதியில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பிடித்து ஏலம் விட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் சாலையில் திரிந்த மாடுகள் ஏலம் விடும் பணிகள் நடைபெற்றது.

நெல்லை பாஜக தலைவர் கைது

அப்போது, மாட்டின் உரிமையாளர்கள் ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. அதைத் தொடர்ந்து ஏலம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்ட மாடுகள் பாளையங்கோட்டை வாட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்றிரவு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் கட்சி கொடியுடன் அங்கு திரண்ட பாஜக நிர்வாகிகள் மாடுகளை விடும்படி போராட்டம் நடத்தினர். பின்னர் அங்கிருந்த மாநகராட்சி அலுவலர்களிடம் மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மாடுகளை அடைத்து வைத்து அவற்றிற்கு உணவு வழங்காமல் சித்திரவதை செய்வதாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று அலுவலர்கள் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாவட்ட தலைவர் தயாசங்கர் ஒருமையில் பேசியவாறு அங்கிருந்து அலுவலர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக எங்களை மீறி மாடுகளை ஏலம் விடுவீர்களா என்று சவால் விட்டுள்ளார்.

தொடர்ந்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை பாஜகவினர் அ அவிழ்த்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது மாநகராட்சி அலுவலர்கள் கொடுத்த புகாரில் மாநகர காவல் துறையினர் தயாசங்கர் மற்றும் இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர்

இந்த கைது சம்பவத்திற்கு பின்னணியில் நடைபெற்ற பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பாஜக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்த உடனே மாநகராட்சி ஆணைய சிவ கிருஷ்ணமூர்த்தி நெல்லை மாநகர காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைவர் மீதும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும் மத்தியில் ஆளுங்கட்சி என்பதாலும் ஏற்கனவே கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே தற்போது பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டாம் என மாநகர காவல் துறை மறுத்துள்ளது. ஆனால், மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி பாஜக நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். குறிப்பாக தங்கள் அலுவலகத்திற்கு சென்று தனது அலுவலர்களையே மிரட்டியதால் கடும் டென்ஷனில் இருந்துள்ளார்.

எனவே நிச்சயம் அவர்களை கைது செய்தாக வேண்டும் என கூறியுள்ளார் இதனிடையே மாநகர காவல்துறை மறுக்கவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேருவை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். மேலும், காவல் உயர் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்து எப்படியாவது கலாட்டாவில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பாக ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி அவசர அவசரமாக சென்னைக்கே சென்று உயர் காவல் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதாக தெரிகிறது.

ஆணையரின் இந்த நடவடிக்கையால் பாஜக நிர்வாகிகளை உடனே கைது செய்யும்படி சென்னை காவல் தலைமை அலுவலகத்தில் இருந்து நெல்லைக்கு உத்தரவு பறந்துள்ளது. அதன் பிறகே நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்பட 3 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் கைதான பாஜக நிர்வாகிகள் மூன்று பேரை வரும் இரண்டாம் தேதி வரை 13 நாள்கள் நீதிமன்ற காவல் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்ட தலைவர் உள்பட மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவை மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பாஜக தலைவரும் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசை எதிர்த்து நேரடியாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: '"சேரி" என அழைக்கும் இடங்களுக்கு அம்பேத்கர், பெரியார் பெயர் சூட்டுங்கள்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.