முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

author img

By

Published : Sep 3, 2021, 4:51 PM IST

mudumalai-sanctuary-opend

120 நாள்களுக்குப் பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட முதுமலைப் புலிகள் காப்பக சரணாலயத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து வாகன சவாரியில் பயணம் செய்தனர்.

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் மிக முக்கியப் புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளைக் கண்டுகளிக்க யானை சவாரி, வாகன சவாரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா தொற்று காரணமாக 120 நாள்களுக்கு முன்பு மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று காலை முதல் திறக்கப்பட்டது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதேபோல் என்95 கொண்ட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாகன சவாரி செல்லும்பொழுது கண்டிப்பாக 50 விழுக்காடு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் வனப்பகுதிக்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினர் சார்பாக வெப்ப பரிசோதனை செய்யப்படும்.

சானிடைசர் உபயோகம் செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் முதுமலை யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு உணவு வழங்குவதைக் காண 50 விழுக்காடு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களும் தகுந்த இடைவெளி பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வாகன சவாரியில் சுற்றுலாப் பயணிகள்

மேலும்,வாகன சவாரி காலை 6.30 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். யானைகளுக்கு உணவு வழங்குவதைக் காண காலை 8.30 மணிமுதல் 9 மணி வரையும், மாலை 5.30 மணிமுதல் 6 மணி வரையும் அனுமதியளிக்கப்படும். சுமார் 30 நிமிடங்கள்வரை உணவு வழங்கப்படும். யானைகள் சவாரி, தங்கும் விடுதிகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது முதுமலை புலிகள் காப்பகம் மழை பெய்து பசுமையாக உள்ள நிலையில் அதிகளவிலான வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இன்று (செப்டம்பர் 3) குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் வாகன சவாரியில் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

இதையும் படிங்க : முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.