4-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்.. 'பாடை' கட்டி கண்ணீர் மல்க ஒப்பாரி!

author img

By

Published : Dec 3, 2022, 6:26 PM IST

சர்க்கரை ஆலையை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்

சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக திருப்பி வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம் திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.400 கோடி தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்த 4 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த 2017ம் ஆண்டு நஷ்ட கணக்கு காட்டி மூடப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடி மற்றும் பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ஆலை நிர்வாகம் பெற்ற ரூ.300 கோடி கடன் தொகை திரும்ப வழங்க கோரியும் பல உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும், பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பயன் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரூ.3,750 கோடி மதிப்பிலான இந்த திரு ஆரூரான் (தனியார்) சர்க்கரை ஆலையை சமீபத்தில் கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற தனியார் நிறுவனம் ரூ.145 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. புதிதாக பொறுப்பு எடுத்துக் கொண்ட கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் கரும்புக்கான நிலுவைத் தொகையில் 57 சதவீதத்தை மட்டும் எங்களால் தர முடியும். பல்வேறு வங்கிகளில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

சர்க்கரை ஆலையை எதிர்த்து விவசாயிகள் நூதன போராட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே உண்டு, உறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தின் 4வது நாளான இன்று கரும்பு விவசாயிகள் தங்களது பிரச்சனைக்கு உடனடியாக அரசும், ஆலை நிர்வாகமும் தீர்வு காணாவிட்டால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்பதனை சுட்டிக்காட்ட தூக்கு போட்டு தொங்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு விவசாயிக்கு பாடைகட்டி, பெண்கள் ஒப்பாரி வைத்து, கொள்ளி சட்டி ஏந்தி பாடையை கண்ணீர் மல்க சுற்றி வரும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக கரும்பு விவசாயிகளை திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகமும், கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனமும் காலில் போட்டு மதிப்பதாக சித்தரித்து காட்சிப்படுத்தி, பொது மக்களுக்கும், அரசிற்கும் தங்களது நிலையை கண்ணீருடன் நினைவூட்டினர்.

போராட்ட களத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, "ரூ.3,750 கோடி மதிப்பிலான இந்த ஆலையை கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் வெறும் ரூ.145 கோடிக்கு ஏலம் எடுத்துவிட்டு தற்போது விவசாயிகளின் பாக்கியில் ரூபாய்க்கு, 57 பைசா மட்டும் தான் தருவோம் என்கின்றனர். தற்போது வங்கி கடனை ஏற்க மறுப்பதையும் கரும்பு விவசாயிகள் ஏற்க முடியாது. பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லாவிற்கு கடந்த 3 நாட்களாக பலமுறை அலைபேசி வாயிலாக அழைத்து போராட்டம் குறித்து விவரங்கள் தெரிவித்த பிறகும், இதுவரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இனியும் தமிழ்நாடு அரசு, கால்ஸ் நிறுவனம் மற்றும் திருஆரூரான் நிறுவனமும் கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணாமல் அலட்சியப்படுத்தினால் மாநில தலைநகரான சென்னையில் போராட்டத்தை கொண்டு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: யானைகள் வழித்தடத்தில் செங்கல் சூளை; மாசுகட்டுப்பாட்டு வாரியம் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.