உரம், யூரியா இல்லாமல் தவிப்பு; டெல்டாவை புறக்கணிக்கிறதா அரசு?- பி.ஆர்.பாண்டியன் கேள்வி!

உரம், யூரியா இல்லாமல் தவிப்பு; டெல்டாவை புறக்கணிக்கிறதா அரசு?- பி.ஆர்.பாண்டியன் கேள்வி!
பருவமழையால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு அரசு இதுவரை இழப்பீடு வழங்காதது டெல்டா பகுதிகளை அரசு புறக்கணிக்கறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிவுறும் நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்காதது விவசாயிகளுக்கு வருத்தம் அளிக்கிறது. காலதாமதம் செய்வதை ஏற்க இயலாது என்றும் காவிரி டெல்டா தமிழ்நாடு அரசால் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற அச்சத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு நிறுவனங்களால் வழங்கப்படும் உரம் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் போது நெய்வேலி மற்றும் அன்னூர் ஆக இருந்தாலும் முதலமைச்சர் கொள்கை முடிவை எடுக்க வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலம் கையகப்படுத்துவதை ஏற்க முடியாது.
முல்லை பெரியார் அணை தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் கேரள அரசு காலம் கடத்தி வருகிறது கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர வேண்டிய தமிழ்நாடு அரசு காலங்கடத்தி வருகிறது" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணியா? - என்ன சொல்லப்போகிறது நீதிமன்றம்?
